Aran Sei

‘உயிரே போனாலும் போராட்டக் களத்தைவிட்டு நகர மாட்டோம்’ – விவசாயிகள் உறுதி

காசீப்பூர் எல்லையை இன்று (28.01.21) இரவிற்குள் காலி செய்யுமாறு காசியாபாத் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால், டெல்லி – உத்திரபிரதேச எல்லையில் பதற்றம் நிலவுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்ட களத்திற்கு வரும், மின்சாரம் மற்றும் தண்ணீரை துண்டித்து இருக்கும் அரசு, துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்தினாலும், எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக, பாரத் கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர், ராஜேஷ் திகாத் கூறியதை அடுத்து விவசாயிகள் இடத்தைக் காலி செய்ய மறுத்துவிட்டனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”நாங்கள் இங்கிருந்து செல்லமாட்டோம். நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம், ஆனால் விவசாய சட்டங்கள் திரும்பப் பெறும் வரை போராட்டத்தை நிறுத்தமாட்டோம்” என ராகேஷ் திகாத் கூறியிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

கலவர தடுப்பு உபகரணங்களுடன் காவல்துறையினரும், அதிரடி படையினரும் போராட்டக் களத்தைச் சுற்றி வளைத்ததால், விவசாயிகள் மேடைக்கு அருகில் சென்றனர் என, திகேத்  குறிப்பிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தன்று நடைபெற்ற நிகழ்விற்கு கண்டனம் தெரிவிக்கும் கருத்துகள் தாங்கிய பேனர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு, பக்தவர்பூர் மற்றும் ஹமீத்பூரை சேர்ந்த சுமார் 70 முதல் 100 வரையிலான உள்ளூர்வாசிகள், சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தியதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

ராகேஷ் திகாத், யோகேந்திர யாதவ், மேதா பட்கர் உள்ளிட்ட 37 விவசாய சங்க தலைவர்கள் மீது கொலை முயற்சி, கலவரத்தை தூண்டுதல், கூட்டு சதி ஆகிய குற்றங்களுக்காக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நோட்டீஸ் வழங்கியுள்ள டெல்லி காவல்துறை. அவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குஜராத் சட்டமன்ற உறுப்பினரும், செயல்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி தனது டிவிட்டர் பக்கத்தில் “இன்றிரவு உத்தர பிரதேச காவல்துறையினரால், போராடும் விவசாயிகள் தாக்கப்படலாம் என்று, காசிப்பூர் எல்லையிலிருந்து, பத்திரிகையாளர்களும், நண்பர்களும் அளிக்கும் தகவல் கவலையளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

“அவர்கள் விவசாயிகள். தங்கள் உரிமைக்காக மாதக்கணக்கில் போராடி வரும நமது நாட்டின் குடிமக்கள்” என்றும் ஜிக்னேஷ் மேவானி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், என உறுதியாக இருக்கும் விவசாயிகளின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் விதமாக,  பட்ஜெட் கூட்டதொடருக்கு முன்பாக, ஜனவரி 29 ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் குடியரசுத்துலைவர் ஆற்றும் உரையைப் புறக்கணிக்க இருப்பதாக, 16 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து, கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்