இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களை எதிர்க்கும் வகையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் வீடுகள் மற்றும் வாகனங்களில் கறுப்புக் கொடிகளை ஏற்றியும், பிரதமர் மோடியின் உருவ பொம்மைகளை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பாந்தர் கலான் மற்றும் சப்பா கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பிரதமரின் உருவ பொம்மையை எரித்தும், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டம் தொடர்பாக, கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவின் பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர், தி இந்துவிடம் பேசுகையில், “எங்கள் கடைகள், வீடுகள், வாகனங்கள் போன்றவற்றில் கறுப்புக் கொடிகளை ஏற்றினோம். கறுப்பு தலைப்பாகையும் கறுப்பு ஆடைகளையும் அணிந்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினோம். மேலும், பாஜக அரசின் விவசாய விரோதக் கொள்கைகளுக்கு எதிராக எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், உருவ பொம்மைகளை எரித்தோம்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,“புதிய விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது மட்டுமே உங்கள் ஒரே கோரிக்கை. தவிர, மின்சாரச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாய விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹரியானாவில் நடந்த போராட்டத்திற்கு தலைமை வகித்த பாரதிய கிசான் யூனியனின் (சாதுனி) குர்னம் சிங், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசிற்கு எதிரான போராட்டங்களை நடத்த பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி போராட்டக்களங்களுக்கு வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
source; thehindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.