Aran Sei

விவசாயிகள் விஷம் குடித்தால் கவலையில்லை, பீட்சா சாப்பிடுவது செய்தியா?

டெல்லியின் எல்லைகளில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு பீட்சா வழங்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டதற்குப் பதிலளிக்கும் விதமாக, ‘விவசாயிகள் விஷம் குடித்தால் பிரச்சினை இல்லை, பீட்சா சாப்பிட்டால் பிரச்சினையா?’ எனப் பஞ்சாப்பைச் சேர்ந்த பாடகர் மற்றும் நடிகர் தில்ஜித் தோசஞ்ச் கேள்வி எழுப்பியுள்ளதாக என்.டி.டி.வி தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகக் கூறி, டெல்லியின் எல்லையில் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உணவு உட்பட பல அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குப் பல நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. ரொட்டிகளைச் செய்வதற்கு இயந்திரம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. முதியோர் ஆரோக்கியத்தைக் கருதி கால்களை மசாஜ் செய்யும் கருவிகள் ஓர் அரசு சாரா அமைப்பால் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, சனிக்கிழமை அன்று, அம்ரித்சரைச் சேர்ந்த ஷன்பீர் சிங் சந்து எனும் 21 வயது இளைஞர், தன்னுடைய நான்கு நண்பர்களுடன் ஹரியானாவில் இருக்கும் வணிக வளாகத்திற்குச் சென்று 400 பீட்சாக்களை வாங்கிக்கொண்டு போராட்டக் களத்திற்குச் சென்றார். போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் அங்கிருந்தவர்களுக்குப் பீட்சாக்களைப் பகிர்ந்தளித்தார் என்கிறது தி இண்டியன் எக்ஸ்பிரஸ்.

இது பலரை நெகிழச் செய்தது என்றாலும், சமூக வலைத்தளங்களில் வலது சாரியினர் விவசாயிகளை அவமரியாதை செய்யும் தொனியில் இதுகுறித்து கருத்துகளைப் பதிவு செய்தனர். ஒருவர், “இது போராட்டமா? பீட்சா பார்ட்டியா?” என தில்ஜித்தின் ட்விட்டர் முகவரியைக் குறிப்பிட்டுக் கேட்டிருந்தார். மேலும் ஒருவர், “அடுத்ததாக அழகு நிலையங்களும் முடி திருத்தகங்களும் போதைப் பொருள், மது முகாம்களும் வரும்” எனப் பதிவு செய்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக , “விவசாயிகள் விஷம் குடிப்பது குறித்து கவலை இல்லை. ஆனால் பீட்சா சாப்பிட்டால் அது செய்தியா?” என்று ஒரு ட்விட்டர் பயன்பாட்டாளர் ஒருவர் தெரிவித்த கருத்தைத் தன்னுடைய பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் தில்ஜித் தோசஞ்ச்.

இதற்கு முன் பாலிவுட் நடிகை கங்கானா ரனாவத் விவசாயிகளின் போராட்டத்தை அவமரியாதை செய்யும்படி ட்விட்டரில் எழுதிய போது, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் தில்ஜித் பஞ்சாப் மொழியில் எதுகை மோனையோடு கவிதைகள் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்