Aran Sei

குடியரசு தினத்தில் ‘டிராக்டர் அணிவகுப்பு’ போராட்டம் – அனைவரும் ஆதரவளிக்க விவசாயிகள் கோரிக்கை

விவசாய சட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் முடிவெடுக்கட்டும் என்று, மத்திய அரசு கைகழுவுவது, போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் சூழ்ச்சி என்று, விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, பாரதிய கிசான் சங்கத்தின் மாநில செயலாளர் ஷின்காரா சிங் மான் “இந்த பிரச்சனையை உச்சநீதிமன்றத்திடம் விட்டு விடலாம் என்ற மத்திய அரசின் யோசனை, தீர்வு காண்பதை தாமதப்படுத்துவதாகும். பிரச்சனையை நீட்டிக்கச் செய்வதே  அவர்களின் நோக்கமாக உள்ளது. இதை தீர்ப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. நீதிமன்றம் முடிவெடுக்கட்டும் என்று கூறுவது, போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தந்திரம். நாங்கள் இந்த யோசனையை ஏற்கனவே நிராகரித்துவிட்டோம்” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பாரதிய கிசான் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹரிந்தர் சிங் “சட்டத்தை இயற்றியது மத்திய அரசுதான். அதை அவர்களால் திரும்ப பெறமுடியும். இதில் நீதிமன்றம் தலையிட அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் விவசாய பொருட்களை குறைந்த பட்ச ஆதார விலைக்கே விற்க வேண்டும் என்பதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளில் உறுதியாக இருப்பதாக, போராட்டத்தில் ஈடுபடும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

போராட்டத்தை தீவிரப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள விவசாய சங்கங்கள், குடியரசு தினத்தன்று நடத்தவுள்ள டிராக்டர் அணிவகுப்பிற்கு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்