Aran Sei

விவசாயச் சட்டத்தை அமல்படுத்த கோரிய எதிர்க்கட்சிகள் அடங்கிய குழு : விவசாய சங்கங்கள் கண்டனம்

த்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020-ஐ அமல்படுத்தக் கோரி 13 கட்சிகள் இடம்பெற்றுள்ள உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத்திற்கான நிலைக்குழு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டதற்கு போராடும் விவசாயிகள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மார்ச் 19-ம் தேதி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சுதீப் பாண்டோபாத்யாய் தலைமையிலான அந்நிலைக்குழு மக்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில், “அண்மையில் இயற்றப்பட்ட ‘அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டமானது (2020), மேம்பட்ட முதலீடுகளைப் பெறுவதற்கான சூழலை உருவாக்கி, அதன் வழியாக விவசாயத் துறையில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வளங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒரு ஊக்க சக்தியாக இருக்கும். இதன் வழியாக, விவசாய விளைப்பொருள் சந்தையில் ஆக்க பூர்வமான போட்டியை உருவாக்கி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விவசாய சட்டங்களை அமல்படுத்தக் கோரும் எதிர் கட்சிகள்: மத்திய அரசிடம் கோரிக்கை

30 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவில், ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம், நாகா மக்கள் முன்னணி, தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, சிவசேனா, சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் ஆகிய 13 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லி எல்லையில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மூன்று விவசாய சட்டங்களில் இச்சட்டமும் ஒன்றாகும். இக்குழுவில் உள்ள கட்சிகளில் பெரும்பாலானவற்றின் நிலைப்பாடானது மூன்று விவசாய சட்டங்களுக்கும் எதிரானது. அதில், காங்கிரஸ் கட்சியானது இம்மூன்று சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 21), நிலைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கண்டன அறிக்கை ஒன்றை போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ளது.

‘பெங்களூருவில் ஒரு டெல்லியை நிகழ்த்துங்கள்; நாற்திசையில் இருந்தும் முற்றுகையிடுங்கள்’ : விவசாயிகள் சங்கம் அழைப்பு

அதில், இந்த முடிவானது ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பையும் விவசாயிகளின் பயிர் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உணராது எடுக்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், “இதன் காரணமாக, விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இம்மூன்று சட்டங்களை ரத்து செய்ய கோரியும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த கோரியும் நடத்தப்படும் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துங்கள்.” என்று அக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

மார்ச் 26-ம் தேதி திட்டமிடப்பட்ட நாடு தழுவிய பாரத் பந்த் வெற்றிகரமாக அமையும் என்றும் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் மகாபஞ்சாயத்துகளுக்கு பெருகி வரும் ஆதரவு அதை உறுதி செய்கிறது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து சேவைகளும் அன்று காலை 6 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நிறுத்தப்படும் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா கூறியுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்