Aran Sei

‘பாரத் பந்த், ஹோலி பண்டிகையில் விவசாய சட்ட நகல் எரிப்பு, பாஜகவுக்கு எதிரான பிரச்சாரம்’

ரியானா மாநில சட்டபேரவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆளும் பாஜக – ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) அரசை ஆதரித்த சட்டபேரவை உறுப்பினர்களை வரும் தேர்தல்களில் புறக்கணித்து, அவர்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் ஆக்குவோம் என்று ஹரியானா விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

நேற்று (மார்ச் 10), ஹரியானா சட்டபேரவையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் 32-55 என்ற எண்ணிக்கையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை கைவிடாவிட்டால் எத்தனை ஆண்டுகளானாலும் போராட்டம் தொடரும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

இந்நிலையில், நேற்று (மார்ச் 10), விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் தலைவர்கள், செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, மார்ச் 26-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பாரத் பந்த் உட்பட அடுத்த நான்கு மாத காலத்திற்கான செயற்திட்டங்களை அறிவித்துள்ளனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அச்செய்தியில், ” விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் யார் நிற்கிறார்கள். யார் எதிராக நிற்கிறார்கள் என்பதை இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தெளிவாக அம்பலப்படுத்திவிட்டது. ஏற்கனவே தங்கள் சொந்த கிராமங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படாத பாஜக-ஜேஜேபி தலைவர்களை மேலும் சமூக புறக்கணிப்பு செய்ய ஹரியானா தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.” என்று பாரதிய கிசான் சங்கர்ஷ் சமிதியின் தலைவரான விகாஸ் சிசார் கூறியுள்ளார்.

ஹரியானா பாஜக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆதரிக்கும்படி வலியுறுத்தும் விவசாயிகள்

“விவசாய சமூகத்துக்கான கட்சி என்று தன்னை வர்ணித்துக்கொள்ளும் ஜேஜேபியின் விவசாயிகள் விரோத முகமானது முற்றிலும் அம்பலப்பட்டு போயுள்ளது. இந்த சட்டபேரவை உறுப்பினர்களுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை. இந்த விவசாய விரோத முகங்களுக்கு எதிராக கொடுக்க வேண்டிய தக்க பதிலடிக்கான விதைகளை விவசாயிகள் விதைத்துள்ளனர். விரைவில் அதன் விளைவுகள் அறுவடை செய்யப்படும்.” என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த மாதம் முழுவதும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவிற்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் சங்க தலைவர்கள் பலர் முடிவெடுத்துள்ளனர்.

“மார்ச் 15 ம் தேதி, தனியார்மயமாக்கல் எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் பிரச்சனையையும் நாங்கள் அப்போராட்டத்தில் முன்னிலைப்படுத்துவோம்.” என்று பாரதிய கிசான் யூனியனின் மூத்த தலைவர் பூட்டா சிங் புர்ஜ்கில் கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

‘நான் போராட்டத்தில் இருந்தாலும், வயல்களை கிராமத்தினர் பார்த்துக் கொள்வார்கள்’ – ஒன்றிணைந்து அறுவடையை கையாளும் விவசாயிகள்

மார்ச் 26-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம், மார்ச் 19-ம் தேதி விவசாய விளைபொருள் மண்டிகளில் ஆர்ப்பாட்டங்கள், பகத்சிங்கின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், மார்ச் 23-ம் தேதி இளைஞர்கள் பெருமளவு பங்குபெறும் போராட்டங்கள், மார்ச் 28 ஆம் தேதி ஹோலி பண்டிகையில் கொளுத்தப்படும் நெருப்பில் மூன்று விவசாய சட்ட நகல்களை எரித்தல் போன்ற போராட்டங்களை நடத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்