மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி கடந்த 46 நாட்களாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயச் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி மத்திய அரசு வழக்கறிஞரை நோக்கி “நீங்கள் இந்தச் சட்டங்களை நிறுத்தி வைக்கிறீர்களா, அல்லது நாங்கள் செய்யவா? இதில் என்ன கெளரவ பிரச்சனை?” என்று கேள்வியெழுப்பியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
”இங்கு (போராட்டத்தில்) ஏதேனும் தவறு நிகழ்ந்துவிட்டால், அதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் எந்த அசம்பாவிதமும் நடப்பதை விரும்பவில்லை” என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “நீங்கள் (மத்திய அரசு) இந்த பிரச்சனையை திறம்பட கையாள்வது போல தெரியவில்லை. இங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது? நாங்கள் இன்றே இதற்கோர் முடிவு கொண்டு வரப்போகிறோம்” என்று மத்திய அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம் “நிலைமை மோசமாகிவிட்டது. மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த காலை நிலையில், வயதானவர்களும் பெண்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளது ஏன்?” என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளதாக என்டிடிவி கூறியுள்ளது.
இந்த வழக்கில் ஆஜரான மத்தியஅரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே ஆரோக்யமான உரையாடல்கள் நடந்து வருவதாக கூறியுள்ளார். இருப்பினும் உச்ச நீதிமன்றம், கள நிலவரம் வேறொன்றாக இருப்பதாக பதிலளித்துள்ளது.
தொடர்ந்து தன் தரப்பு வாதத்தை முன்வைத்த அரசு தரப்பு வழக்கறிஞர், விவசாயச் சட்டங்களை நிறுத்தி வைக்க கூடாது என்றும் வெறும் இரண்டு மூன்று மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள்தான் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் உச்ச நீதிமன்றம், “உங்களுக்கு போரட்டம் செய்ய உரிமை உண்டு. நாங்கள் (உச்ச நீதிமன்றம்) உங்கள் போரட்டத்தில் தலையிடப் போவதில்லை. உங்கள் போராட்டத்திற்கு ஒரு நோக்கம் இருக்கிறது, அது ஒருவரிடம் பேசுவதன் மூலம் நிறைவேற்றப்படும். நீங்கள் பல ஆண்டுகளாக போராட்டத்தில் அமர முடியாது.” என்று தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் சட்டம் அமலாவதை நிறுத்தி வைத்த பின்பும் விவசாயிகள் போராட்டத்தை தொடர விரும்பினால், அதே பகுதியில் போராட விரும்புகிறார்களா? அல்லது வேறேதேனும் பகுதிகளுக்குச் செல்ல விரும்புகிறார்களா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.