மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி கடந்த 46 நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கும் மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரி தாக்கல் செய்த மனுக்களும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ”நாங்கள் உங்களுக்கு (மத்திய அரசு) எதிராக எந்தவிதமான தவறான குற்றச்சாட்டையும் முன் வைக்க விரும்பவில்லை. ஆனால், இந்த சூழ்நிலையை நீங்கள் கையாளும் விதத்தில் நாங்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்” என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டம் – ” பேச்சுவார்த்தை தொடர்பாக அரசு உண்மைகளை திரிக்கிறது”
மத்திய அரசு விவசாயச் சட்டங்களில் திருத்தங்கள் மட்டுமே செய்ய முடியும் என்றும் விவசாயிகள் மூன்று சட்டங்களையும் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி வருவதையும் செய்தித்தாள்களில் படிப்பதாக கூறியுள்ள நீதிபதிகள் “விவசாயச் சட்டங்கள் அமலுக்கு வருவதை தடை செய்து, அந்தச் சட்டங்கள் குறித்து ஒரு குழு அமைத்து ஆராயலாம்” என்று கூறியுள்ளனர்.
“நீங்கள் இந்த பிரச்சனையில் தீர்வு காண விரும்புகிறீர்களா அல்லது பிரச்சனையின் காரணமே நீங்கள் தானா? என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், விவசாயச் சட்டங்கள் நன்மையானது என்று இங்கு ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை” என்று நீதிபதிகள் கூறியுள்ளதாக தி இந்து செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.
ராமர் கோவில் கட்டுவதை சகித்துகொள்ளாமல் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர் – யோகி ஆதித்யனாத்
மேலும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு விவசாயச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்து அமர்வு விசாரிக்காது என்றும் உச்ச நீதிமன்றத்தின் நோக்கம் ஒரு இணக்கமான தீர்வைக் கொண்டு வந்து போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதே ஆகும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம் – சட்ட நகல்கள் எரிப்பு, “டெல்லி சலோ” பேரணி, பெண்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் போராட்டத்தை தொடரக்கூடாது என விவசாயிகள் தரப்பிலிருந்து ஒப்புதல் கோரியுள்ள நீதிபதிகள், ”நீங்கள் (விவசாயிகள்) எங்கள் (மத்திய அரசு) மீது நம்பிக்கை வைத்தாலும் சரி இல்லையன்றாலும் சரி, நாங்கள் தான் இந்தியாவின் உச்ச நீதிமன்றம், நாங்கள் எங்கள் கடமையை செய்வோம்” என தெரிவித்ததாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.