Aran Sei

விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து நிதி: போலி செய்தியை வெளியிட்ட நியூஸ் 18

மத்திய அரசு கொண்டு வந்துள்ள முன்று வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி கடந்த 53 நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளை மத்திய பாஜக அரசு மிக கடுமையாக விமர்சித்தது.

பாஜகவின் சமூக ஊடக பிரிவு தலைவர் அமித் மால்வியா விவசாயிகளின் போராட்டத்தில், மாவோயிஸ்ட் மற்றும் காலிஸ்தான் (சீக்கிய பிரிவினைவாத இயக்கம்) இயக்கத் தொடர்புகள் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

விவசாயப் போராட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், விசாரணைக்கு ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் தனிநாடு கோரும் அமைப்பினர் ஊடுருவி உள்ளதாக அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.” என்று வாதிட்டார். இந்தக் குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றம் எழுத்துப்பூர்வமாக தர உத்தரவிட்டது.

விவசாயிகள் போராட்டத்தில் ‘தீவிரவாதிகள்’ என மத்திய அரசு குற்றச்சாட்டு – பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி உத்தரவு

”டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதி வசூலிக்கப்படுகிறது. பிரிட்டன், கனடா, ஜெர்மனி உட்பட பல நாடுகளிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அரசு சாரா அமைப்புகள் வழியாக ஏராளமான நிதி, இந்தப் போராட்டத்துக்கு அனுப்பப்படுகிறது. இந்தியாவில் உள்ள காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் நிதியுதவி செய்து வருகின்றனர்.” என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) முதல் தகவல் அறிக்கையில் சில விவசாயிகள் மீது (எப்ஐஆர்) குற்றம் சாட்டப்பட்டது. இது போன்று பல குற்றச்சாட்டுகள் போராடும் விவசாயிகள் மீது சுமத்தப்பட்டன.

போராடும் விவசாயிகள் காலிஸ்தானியர்களா ? – பத்திரிகை ஆசிரியர் அமைப்பு கடும் கண்டனம்

இந்நிலையில், கடந்த ஜனவரி 14 அன்று விவசாயிகள் போராட்டத்திற்காக வெளிநாட்டிலிருந்து நிதி வருவதாக உளவுத்துறை கூறியதாக சிஎன்என் நியூஸ் 18 நிறுவனம் செய்தி வெளியிட்டது. அந்தச் செய்தியில் கனடாவைச் சேர்ந்த ஜொகிந்தர் பாசி என்ற நபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கு தீவிரவாத அமைப்புகளில் இருந்து நிதி – விவசாயிகள் தலைவருக்கு என்ஐஏ சம்மன்

இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ள பாசி, தான் காலிஸ்தானியர் இல்லையென்றும் பிரிவினை சக்திகளுக்குத் துணை போகமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், தான் ஒரு சிறந்த தேசியவாதி எனவும் இந்திய கொடியை பெருமையாக பறக்க விடுபவன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிஎன்என் நியூஸ் 18 செய்தி நிறுவனம் தான் வெளியிட்ட செய்தியை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்