Aran Sei

சந்தை பொருளாதாரத்தை ஆதரிக்கும் கனடா, விவசாயிகளுக்கு பரிந்து பேசுவதா? – பாஜக

“உலக வர்த்தக அமைப்பு கொண்டு வரும் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் புதிய வேளாண் கொள்கைகள் ஆகியவற்றை கடுமையாக எதிர்க்கும் கனடா, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து கேள்வியெழுப்புவதா” என பாஜகவின் வெளியுறவு விவகாரத்துறை பொறுப்பாளர் விஜய் சவ்தாய்வாலே கூறியுள்ளார்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 10 நாட்களாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் இந்தப் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ மற்றும் பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரீத் கவுர் கில் ஆகியோர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 1-ம் தேதி விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, “இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி வெளிவரும் செய்திகள் கவலையளிக்கும் விதமாக உள்ளது. உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும்” எனக் கூறினார்.

“உரையாடலின் முக்கியத்துவத்தை நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் நேரடியாகப் பேசியுள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

அரசின் உணவை மறுத்த விவசாயிகள் – சுயமரியாதையின் அடையாளம் என பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி

இதையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ”கனடா நாட்டின் பிரதமர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது, இதுபோல் தொடர்ந்து பேசிவந்தால், இருநாட்டு உறவுகளிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகியும், வெளியுறவு விவகாரத்துறை பொறுப்பாளருமான டாக்டர் விஜய் சவ்தாய்வாலே, விவாயிகள் பிரச்சனையில் கனடா இந்தியாவை விமர்சிப்பது ”போலித்தனத்தை தவிர வேறொன்றுமில்லை” என தன் ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“உலக வர்த்தக அமைப்பு கொண்டு வரும் குறைந்தபட்ச ஆதார விலை, புதிய வேளாண் கொள்கைகள் ஆகியவற்றை கடுமையாக எதிர்க்கும் கனடா, இந்தியாவின் உள்நாட்டு விவசாய நடவடிக்கைகள், உணவு மற்றும் வாழ்வாதார பாதிப்பு குறித்து கேள்வியெழுப்பிகிறது” என பதிவிட்டுள்ளார்.

”வேளாண் ஏற்றுமதியாளர்கள் குழுமத்தில் (கெய்ர்ன்ஸ்) கனடா உறுப்பினராக உள்ளது, இந்த குழுவின் நோக்கம் உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தியா போன்ற நாடுகளில் சந்தையை அதிகரிப்பதாகும். உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் வேளாண் மானியங்களை கூட இந்த அமைப்பு குறைக்க முயல்கிறது” என்று விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.

போராடும் விவசாயிகள் காலிஸ்தானியர்களா ? – பத்திரிகை ஆசிரியர் அமைப்பு கடும் கண்டனம்

”இந்தியாவின் விவசாயிகளைப் பாதுகாக்கும் இறக்குமதி கட்டுப்பாடுகளையும் கனடா எதிர்க்கிறது. உலக வர்த்தக மாநாட்டில் இந்தியாவின் வேளாண் கொள்கைகள் குறித்து கனடா எழுப்பிய கேள்விகளே, இந்திய விவசாயிகள் மற்றும் விவசாய உற்பத்தியாளர்களின் வாழ்க்கை குறித்து கனடா அரசுக்கு துளியும் அக்கறை கிடையாது என்பதற்கு சாட்சி” என தனது ட்விட்டர் பதிவில் விஜய் சவ்தாய்வாலே கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்