Aran Sei

‘தலித்துகள், ஆதிவாசிகளுடன் நாடாளுமன்றம் நோக்கி பேரணி; டெல்லியில் அறுவடை திருவிழா’ : விவசாயிகளின் அடுத்த திட்டங்கள்

Image Credit : thehindu.com

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தின் ஏப்ரல்-மே மாதங்களுக்கான திட்ட அட்டவணை வெளியாகியுள்ளது.

நேற்று (மார்ச் 31), போராடும் விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர்களில் ஒருவரான தர்ஷன் பால் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, “ஏப்ரல் 5 ஆம் தேதி, விவசாயிகள் நாடு முழுவதும் உள்ள இந்திய உணவு கழகங்களின் அலுவலகங்களை முற்றுகையிடுவார்கள். ஏப்ரல் 10 ஆம் தேதி, குண்ட்லி-மானேசர்-பல்வால் (கேஎம்பி) அதிவிரைவு நெடுஞ்சாலை, காலை 11 மணி தொடங்கி, 24 மணி நேரத்திற்கு முடக்கப்படும். அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 13 ஆம் தேதி டெல்லி எல்லையில் பஞ்சாப்பியர்களின் அறுவடைத் திருவிழாவான பைசாக்கி திருவிழா கொண்டாடப்படும்.” என்று அவர் அறிவித்துள்ளார்.

விவசாய சட்ட நகல்களை எரியூட்டி ஹோலி கொண்டாடிய விவசாயிகள் – இந்திய உணவு கழகத்தை முற்றுகையிட திட்டம்

மேலும், “ஏப்ரல் 14 ஆம் தேதி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளை சம்விதன் பச்சாவ் திவாஸாக (அரசியலமைப்பை காக்கும் நாள்) கொண்டாடப்படும். மே 1 ஆம் தேதி, டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள்-தொழிலாளர் ஒற்றுமையைக் குறிக்கும் வகையில் தொழிலாளர் தினம் கொண்டாடப்படும்.” என்று தர்ஷன் பால் கூறியுள்ளார்.

“நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி செல்லும் நாள் பின்னர் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். இந்தப் பேரணியில் விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், தலித்-ஆதிவாசி-பகுஜன்கள், வேலை வாய்ப்பில்லா இளைஞர்கள் மற்றும் நம் சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் கலந்துக்கொள்வார்கள். தங்கள் கிராமங்களில் இருந்து டெல்லியின் எல்லைகளை நோக்கி, மக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் படையெடுப்பார்கள். இதன் பின் அங்கிருந்து, நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தப்படும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்