Aran Sei

விவசாய சங்கத் தலைவர்களை கொல்ல முயற்சி – டிராக்டர் பேரணியை சீர்குலைக்கும் முயற்சி முறியடிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் 4 பேரைக் கொன்று, டிராக்டர் பேரணியை சீர்குலைக்க சதித்திட்டம் நடக்கிறது என்று விவசாயிகள் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, இரண்டு மாதங்களாக, டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். மத்திய அரசுடன் நடைபெற்ற 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. குடியரசு தினத்தன்று, டிராக்டர் பேரணி நடத்தவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

’விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க முடியாது’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், நேற்று (ஜனவரி 22) இரவு, டெல்லி நகரின் சிங்கு எல்லையில் நடந்துவரும் போராட்டத்தில் முகமூடி அணிந்த ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இருப்பதைப் பார்த்து, அவரைப் பிடித்து விவசாயிகள் விசாரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, முகமூடி அணிந்த அந்த நபரை, உடன் வைத்துக்கொண்டு, விவசாய சங்கத் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

குடியரசு தின டிராக்டர் பேரணி: கலந்து கொள்ள பயிற்சி பெறும் பெண்கள்

அப்போது பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர்களில் ஒருவரான குல்வந்த் சிங் சாந்து, “நாங்கள் போராட்டக் களத்தில் முகமூடி அணிந்த ஒருவரைப் பிடித்துள்ளோம். அந்த நபரை ஹரியானா காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம். விவசாயிகளின்  போராட்டத்தைச் சீர்குலைக்க சதி நடப்பதாக நாங்கள் கருதுகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி : ANI

இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் 4 பேரைக் கொலை செய்யவே, இந்த முகமூடி அணிந்த நபர் வந்துள்ளார் என்றும் அதுமட்டுமல்லாமல் குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடக்கும் டிராக்டர் பேரணியைச் சீர்குலைக்கவும் சதி நடக்கிறது என்றும் குல்வந்த் சிங் சாந்து குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் குடியரசு தின டிராக்டர் பேரணி : அனைத்து மாவட்டங்களிலும் நடத்த தமிழக விவசாயிகள் முடிவு

மேலும், “டெல்லி காவல்துறையினர் மீது அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்துவான். அதற்கு பதில் தாக்குதலாக போராடும் விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தும். இப்படி திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த நபர் கூறினார்.” என்று குல்வந்த் சிங் சாந்து தெரிவித்துள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்