Aran Sei

விவசாயிகளின் வாழ்வில் கண்ணாமூச்சி ஆடும் மோடியை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் – ஸ்டாலின்

விவசாயிகளின் வாழ்வுடன் கண்ணாமூச்சி விளையாட்டு நடத்தும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை விவசாயிகளும், தமிழக மக்களும் என்றைக்கும் மன்னிக்கமாட்டார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஏப்ரல் 10) திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசுவதற்குக் கூட மனமில்லாத – மார்க்கம் தெரியாத – மனிதாபிமானமற்ற மத்திய பாஜக அரசு, அவர்களின் எதிர்காலத்தை மேலும் பாழ்படுத்தும் வகையில் உரவிலையை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த டி.ஏ.பி. உர விலை உயர்வைத் தொடர்ந்து என்.பி.கே. உரங்களின் விலையும் 50 சதவீதம் வரை உயர்ந்து – இன்றைக்கு நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு முழு பேருந்தை சோற்றுக்குள் மறைத்த நிதின் கட்கரி – வெளிப்படும் பாஜகவின் ஊழல் சாம்ராஜ்யம்

“ஜனநாயக உரிமைகளுக்காக – தங்களின் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு விவசாயிகளை பிரதமர் மோடி பழிவாங்குவது நியாயமல்ல. உரவிலையைக் கண்டித்து நாடுமுழுவதும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். ஆங்காங்கு போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இதன் பிறகு “உரவிலை உயர்வு இப்போதைக்கு கிடையாது” என்று மட்டும் ஒப்புக்காக ஒரு அறிவிப்பை மத்திய பாஜக அரசு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத் தேர்தல் முடிந்தவுடன் இந்த விலையேற்றத்தைச் செயல்படுத்துவதற்கான ஒத்திகையே இந்த அறிவிப்பு.” என்று அவர் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.

மேற்குவங்க தேர்தல்: மத்திய பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி

மேலும், “ஏற்கனவே சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து விட்டு – பிறகு திரும்பப் பெற்றது இந்த அரசு. இப்போது உர விலையை உயர்த்தி விட்டு “இப்போது அமல்படுத்தமாட்டோம்” என்று விவசாயிகளின் வாழ்வுடன் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை விவசாயிகளும், தமிழக மக்களும் என்றைக்கும் மன்னிக்கமாட்டார்கள்.” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் முன்னணி உரம் உற்பத்தி நிறுவனமான இப்கோ (Indian Farmers Fertiliser co-operative Limited – IFFCO) டை அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்தின் விலையை 58.33 விழுக்காடு, காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையை 51.9 விழுக்காடு அளவுக்கு அதிகரித்து இருக்கின்றது. கடந்த பிப்ரவரி மாதம் 50 கிலோ எடையுள்ள டிஏபி, ஒரு மூட்டை ரூ 1200க்கு விற்பனை ஆனது. தற்போது ரூ 700 விலை உயர்ந்து ரூ 1900 ஆகி விட்டது. ரூ 1160க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை 10-26-26 காம்ப்ளக்ஸ் உரம், தற்போது ரூ 615 உயர்ந்து ரூ1775க்கு விற்பனை ஆகின்றது.” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவை விரட்ட விமான நிலையத்தில் பூஜை: பாஜக அமைச்சர் தலைமையில் ஊழியர்கள் பங்கேற்பு

“அதேபோல் 20-20-013 காம்ப்ளக்ஸ் உரம் ரூ 950 ல் இருந்து ரூ 400 உயர்ந்து, தற்போது ரூ 1350 ஆக விற்கப்படுகின்றது. பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என்ற மூன்று வகையான உரங்களில், முதல் இரண்டு வகை உரங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுக்கின்றன. சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் உரம் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு, அவற்றின் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை உரம் உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டதால், அவை விலையைத் தாறுமாறாக உயர்த்தி வருகின்றன.” என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

“உரத் தயாரிப்பில் மூலப் பொருளாக இருக்கும் பாஸ்பரிக் ஆசிட் விலை, பன்னாட்டுச் சந்தையில் உயர்ந்ததால், டிஏபி, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலை  உயர்ந்து வருவதாக இப்கோ நிறுவனம் கூறி இருக்கின்றது. ஆனால் அதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. மத்திய பாஜக அரசு உரத்திற்கு அளித்து வந்த மானியத்தைக் குறைத்துவிட்டதால்தான், உரத்தின் விலையை உற்பத்தி நிறுவனங்கள் 60 விழுக்காடு வரை உயர்த்தி விட்டன.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சோகனூர் சாதியப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1 கோடி நிவாரணம் வேண்டும் – அரசிடம் கோரிக்கை விடுத்த திருமாவளவன்

மேலும், “கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், உர மானியத்திற்கு ரூ 1 லட்சத்து 33 ஆயிரத்து 947 கோடி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ரூ 79 ஆயிரத்து 530 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. உர மானியத்தில் ரூ 54 ஆயிரத்து 417 கோடி குறைக்கப்பட்டதால்தான், ரசாயன உரங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது.” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்