மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, அமிர்தசரஸ் செல்லும் பல ரயில்களை ரயில்வே நிர்வாகம் திசை திருப்பியுள்ளது.
முன்னதாக சுமார் 30 விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து நவம்பர் 23-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்தன. இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் சேவைகளை மீண்டும் தொடங்கியது.
பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் : 15 நாட்களுக்கு வாபஸ்
இருப்பினும், கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவை சேர்ந்த விவசாயிகள் தண்டவாளத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர். குழுவினரின் இந்த நடவடிக்கையை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விமர்சித்துள்ளார்.
அங்குள்ள செய்தியாளர்களை சந்தித்த துணை ஆணையர் குர்பிரீத் சிங் கைரா, “அமிர்தசரசிலிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள ஜான்டியாலா ரயில் நிலையத்தை விவசாயிகள் மறித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, அமிர்தசரஸ் செல்லும் பல ரயில்கள் டார்ன் தரனுக்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில ரயில்கள் இன்று காலை பியாஸ் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், பயணிகள், பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் மூலம் அமிர்தசரஸ் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் தொடர்ச்சியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியுள்ள குர்பிரீத் சிங், அவர்கள் அதற்கு இணங்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். காவல்துறையை பயன்படுத்தி போராட்டத்தை கலைக்கும் எண்ணம் பஞ்சாப் அரசுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டம் மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கும் என்றும் இது மாநிலத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.
இருப்பினும், வேளாண் சட்டப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை இந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவை சேர்ந்த விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.