Aran Sei

விவசாயச் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்: கேரள சட்டமன்றம் கூடுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க இருப்பதாக தகவல்

credits : the indian express

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வழிவகை செய்யும் சிறப்பு சட்டமன்றம் கூடுவதற்கு ஆளுநர் அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் கடந்த திங்கள் கிழமையன்று (21-12-20), முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் “விவசாயச் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு, பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிடப்பட்டிருக்கும் நாளுக்கு முன்பு, அதாவது டிசம்பர் 23 ஆம் தேதி ஒரு சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும்” என்று கூறியிருந்தார்.

விவசாய சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் – கேரள சட்டமன்றத்தை கூட்ட மறுக்கும் ஆளுநர்

இதையடுத்து டிசம்பர் 23-ம் தேதி ஒரு நாள் சிறப்பு சட்டமன்றம் கூட அம்மாநில ஆளுநர் அனுமதி மறுத்துள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்கவும், அதற்கெதிராக தீர்மானம் கொண்டு வரும் முனைப்புடன் கேரள அமைச்சரவை மற்றும் எதிர்கட்சிகள் ஒரு நாள் சிறப்புச் சட்டமன்றம் கூடுவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநர் ஆரிஃப் முகம்து கானிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கேரள உள்ளாட்சி தேர்தல் : மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி – பினராயி விஜயன்

ஆனால் சிறப்பு சட்டமன்றம் கூடுவதற்கான அவசர கால தேவை எதுவும் இல்லை எனக் கூறி ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளதாக எண்டிடிவி செய்தி வெளியிட்டிருந்தது.

இதையடுத்து முதல்வர் பினராயி விஜயன் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் சிறப்புச் சட்டமன்றத்தை கூட்டுவதற்கு ஆளுநர் அனுமதி மறுத்துள்ளது வருந்தத்தக்கது என குறிப்பிட்டிருந்தார்.

கேரள ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கோல்வால்கரின் பெயர் – வலுக்கும் எதிர்ப்பு

மேலும் அமைச்சரவை, சிறப்பு சட்டமன்றம் கூடுவதற்கு பரிந்துரை செய்யும் போது, ஆளுநர் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தக் கோரிக்கையை நிராகரிக்க முடியாது எனக் கூறியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் அரசாங்கம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையைப் பற்றி விவாதிப்பதற்காக சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டச் சொல்வதை ஆளுநர் நிராகரிப்பது, வருந்தத்தக்கது என முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.

விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – கேரள அரசு நிறைவேற்றவுள்ளது

கேரளாவில் சிறப்பு சட்டமன்றம் கூட ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்திருப்பது அதிகார மீறல் என்றும் அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்ததாக என்டிடிவி குறிப்பிட்டுள்ளது.

பெண்களை தவறாக பேசியவரை தாக்கிய பெண்களுக்கு முன் ஜாமீன் – கேரள உயர் நீதிமன்றம்

கடந்த டிசம்பர் 21-ம் தேதி ஒரு நாள் சிறப்புச் சட்டமன்ற கூட்டத்தொடர் கூட வேண்டியதற்கான அவசரத்தை ஆளுநரிடம் அரசாங்கம் தெளிவுபடுத்தத் தவறியதால்தான் ஒப்புதல் அளிக்க மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, கடந்த 25-12-20 அன்று கேரளாவின் சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் ஆளுநரைச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்புக்கு பிறகு பேசிய அமைச்சர் சுனில் குமார் ஆளுநருடைய கேள்விகளுக்கு அரசாங்கம் திருப்திகரமாகப் பதிலளித்ததாகக் கூறியுள்ளார். கேரள சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் நேற்றைய தினம் (26-12-20) ஆளுநரை சந்தித்துள்ளார்.

டெல்லி சட்டசபை சிறப்புக் கூட்டம் – விவசாய சட்டங்களைக் கிழித்து எறிந்த அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வழிவகை செய்யும் வகையில் டிசம்பர் 31-ம் தேதி ஒரு நாள் சிறப்பு சட்டமன்றம் கூடுவதற்கான ஒப்புதலை ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்