மத்திய அரசால் இயற்றப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஒரு வாரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் டிசம்பர் 5-ம் தேதி, விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தவுள்ளதாகத் திமுக அறிவித்துள்ளது.
மத்திய பாஜக அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடை முறையை இந்தச் சட்டங்கள் நிர்மூலமாக்கி விடும் என அவர்கள் அச்சம் தெரிவித்தனர். எனவே, இச்சட்டங்களை எதிர்த்து அவர்கள் டெல்லியில் தொடர்ப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் காணொலி வாயிலாக நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகத் திமுக சார்பில் வரும் 5-ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலை 10 மணிக்குக் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டிசம்பர் 4-ம் தேதி தமிழக இடது சாரி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சிகள் தெரிவித்தன. மாநில அரசு அலுவலகங்களுக்கு முன் தொடர்ச்சியான மறியல் போராட்டத்தை நடத்தவுள்ளதாகக் கூறி அவர்கள் கூட்டறிக்கையை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.