Aran Sei

மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

ன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்தாண்டு, மூன்று விவசாய சட்டங்களை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றியது. இம்மூன்று சட்டங்களும் விவசாய விரோத சட்டங்களென குற்றஞ்சாட்டி, அச்சட்டத்தை நீக்கக் கோரியும், விவசாய விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டமாக்கக் கோரியும் விவசாயிகள் ஓர் ஆண்டிற்கும் மேலாக போராடி வருகின்றனர்.

டெல்லியின் மூன்று எல்லைகளில் நடைபெற்றும் வரும் விவசாயிகள் போராட்டம் ஓர் ஆண்டை நிறைவு செய்யவுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் இதற்கான மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் அதனால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

மூன்று விவசாய சட்டங்களையும் நாடாளுமன்றத்தில் வைத்து ரத்து செய்வதோடு, குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராடும் விவசாயிகள் அறிவித்தனர்.

இதையடுத்து, இன்று(நவம்பர் 24), டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

வரும் 29-ம் தேதி தொடங்கவிருக்கும், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், இம்மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்படும். அதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அவர் கையெழுத்திட்டப்பின், முறைப்படி இம்மூன்று விவசாய சட்டங்களும் திரும்பப்பெறப்பட்டதாக அரசாணை வெளியிடப்படும்.

Source: PTI, The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்