ஜூலை 19 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, நாடாளுமன்றத்திற்கு வெளியே தினமும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
நேற்று (ஜூலை 4), டெல்லி சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒறுங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தில், ஜூலை 19 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது நடத்தப்படவுள்ள தொடர் போராட்ட நிகழ்வுகள் முன்மொழியப்பட்டுள்ளன. கூட்டத்தொடரின் எல்லா நாட்களிலும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூட்டா சிங் புர்ஜ்கில், “ஜூலை 17 ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு எச்சரிக்கை கடிதம் தருவோம். அவர்கள் தங்கள் மௌனத்தை கலைக்க வேண்டும் அல்லது தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஒரு பெரிய அளவிலான விவசாயிகள் குழு சிங்கு எல்லையை விட்டு வெளியேறி, நாடாளுமன்றத்தை அடைவோம். நாடாளுமன்றத்திற்குள் நடக்கும் செயற்பாடுகளை முடக்குமாறு எதிர்க்கட்சியினரை வலியுறுத்துவோம். நாங்கள் நாடாளுமன்ற வாசலில் உட்கார்ந்து கொள்வோம். நாங்கள் அதை தினமும் செய்ய உள்ளோம். இதுவே எங்கள் போராட்டத் திட்டம்.” என்று அவர் கூறியுள்ளார்.
இப்போராட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சா , கூட்டத்தொடரின்போது (ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை) நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒவ்வொரு நாளும் ஒரு சங்கத்திற்கு ஐந்து உறுப்பினர்களென, குறைந்தது 200 விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் அமைதியான முறையில் நடக்கும் என்றும் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் ஒரு வலுவான குரலாக இது இருக்கும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர். கூட்டத்தொடருக்கு முன்னதாக உபி மற்றும் பஞ்சாபில் இருந்து அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் போராட்டத்தில் சேர வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் சங்கங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
டீசல், பெட்ரோல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதை எதிர்த்து, ஜூலை 8 ஆம் தேதி காலை 10 மணி முதல் காலை 12 மணி வரை நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெறும் என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.
Source; indianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.