Aran Sei

விவசாய சட்டங்களை ஆராய உச்சநீதிமன்றம் நியமித்த குழு – அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல்

farmers

ச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, விவசாய சட்டங்கள் குறித்த தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது என்று அக்குழுவின் உறுப்பினர் அனில் கான்வாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருப்பதால், இந்த மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அம்மனுக்களோடு போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி தாக்கல் செய்த பல்வேறு மனுக்களையும், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு ஜனவரி 12ஆம் தேதி விசாரித்தது.

விவசாய சட்டங்களுக்கு இடைக்கால தடை – பிரச்சனையை தீர்க்க தனி குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

விசாரணைக்குப் பின், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “இந்தப் போராட்டங்களால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கை பற்றியும் அவர்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்படுவது பற்றியும் நாங்கள் கவலை கொள்கிறோம். எங்களிடம் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விவசாய பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கிறோம். அந்த வகையில், எங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் ஒன்று, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிப்பது. மேலும், ஒரு குழுவை உருவாக்குவது தான். இதை நாங்கள் இப்போது செய்கிறோம்.” என்று கூறினார்.

மேலும், “இந்தக் குழு நமக்காக உருவாக்கப்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நினைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் (போராடும் விவசாயிகள்) இந்தக் குழுவின் முன் வந்து உரையாடலாம். இது உத்தரவுகளையோ தண்டனைகளையோ உங்களுக்கு வழங்காது. மாறாக, அது எங்களுக்கு (உச்ச நீதிமன்றத்திற்கு) இந்த விவசாய சட்ட பிரச்சனையைப் பற்றி ஒரு அறிக்கையை மட்டுமே சமர்ப்பிக்கும்.” என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உறுதியளித்திருந்தார்.

‘உச்ச நீதிமன்ற குழுவில் மோடி ஆதரவாளர்கள்; எவ்வாறு விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும்?’ – காங்கிரஸ் கேள்வி

இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருந்த கிராந்திகாரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால், “பஞ்சாபை சேர்ந்த பூபேந்திர சிங் மான் யார் என்று எனக்குத் தெரியும். அவர் ஏற்கனவே விவசாயத்துறை அமைச்சரைச் சந்தித்து, வேளாண்சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார். ஷேத்காரி ஷன்கதன் அமைப்பைச் சேர்ந்த அனில் கன்வாத் அவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசமாட்டார். அஷோக் குலாத்தி உட்பட அனைவரும் அரசின் ஆதரவாளர் என்பது அறிந்ததே.” என்று தர்ஷன் பால் விமர்சித்திருந்தார்.

இக்குழு குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,  “விவசாய சட்டங்களை ஆதரிப்பவர்களிடம் இருந்து எப்படி நீதி கிடைக்கும். விவசாய விரோத சட்டங்களும், தொழிலாளர் விரோத சட்டங்களும் நீக்கப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (மார்ச் 31), என்டிடிவியுடன் பேசிய அனில் கான்வாத், மார்ச் 19 ஆம் தேதியே குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விட்டது என்றும் இது சட்டரீதியான ரகசிய நடவடிக்கை என்பதால், மேலதிக தகவல்களை இப்போதைக்கு கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்