Aran Sei

சீப்பை ஒளித்து வைப்பதால் திருமணத்தை நிறுத்த முடியாது – மு.க.ஸ்டாலின்

Image Credits: The Week

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகத் திமுகவினர் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கருப்புக் கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு வலுசேர்க்கின்ற வகையில் கருப்புக் கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம். அதிகமானோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்பதால் கழக நிர்வாகிகள் பெரும் மைதானத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

“ஆனால், அதிமுக அரசு, காவல்துறையைப் பயன்படுத்தி போராட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த கழக தொடர்களையும் விவசாயிகளையும் அங்கங்கே தடுத்துத் திருமண மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளது. நாம் ஒரு இடத்தில் போராடுவதற்குதான்  முடிவு செய்தோம். ஆனால் இப்போது சேலம் முழுவதும் போராட்டம் நடக்கின்றது. இந்தப் போராட்டம் முடிந்தவுடன் அவர்களைச் சந்தித்துவிட்டுதான் நான் சென்னைத் திரும்புவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“ஏறத்தாழ 25,000 பேர் அங்கங்கே கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். சீப்பை ஒளித்து வைப்பதால் திருமணத்தை நிறுத்த முடியாது. இது முதல்வர் பழனிச்சாமியின் மாவட்டமாக இருக்கலாம். ஆனால், இது எங்கள் அண்ணன் வீரபாண்டியார் பிறந்த மண்ணும் கூட. அண்ணன் வீரபாண்டியார் வேளாண் துறையில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தவர். அவரது மண்ணில் பேசக் கூடிய நான் அஞ்சி, நடுங்கி, ஓரத்தில் ஒதுங்கிவிடுவேனா?” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்தப் போராட்டம் கழகத்தின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல. நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்காக நடத்தப்படும் போராட்டம். உள்ளவர்கள் தரக்கூடிய உணவைத் தான் அனைவரும் உண்கிறோம். எனவே, மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என்று போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது” என அவர் கூறியுள்ளார்.

“மத்திய அரசு அவசர அவசரமாக, கொரோனா காலத்தைப் பற்றிக் கூடக் கவலை படாமல் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மத்திய அரசுக்கு விவசாயிகள் மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்தார்கள். ஆனால் இன்று அவர்கள் பாஜகவுக்கு எதிராகப் போர் தொடுகிறார்கள்” என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

“நான் ஏழை தாயின் மகன் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பிரதமர் மோடிக்கு ஏழை மக்கள் வீதிகளில் போராடுவது தெரியாதா?” என்று கூறி அவர் விமர்சித்துள்ளார். “விவசாயிகள் வீதிகளில் போராடிக்கொண்டிருந்தபோது வானொலியில் பேசிய மோடி இந்தச் சட்டங்களால் பல நன்மைகள் உண்டு என்று கூறினார். ஆனால், அந்த நன்மை என்னவென்று அவர் கூறவில்லை. அப்படியென்றால், அதில் எந்தவொரு நன்மையையும் இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை பாதிக்கப்படும் என்று அவர் பேசியுள்ளார். “நீங்கள் உண்மையிலேயே ஏழை தாயின் மகனாக இருந்தால் இந்தச் சட்டங்களை திரும்ப பெறுங்கள். அதுவரைப் போராடும் விவசாயிகளுக்குத் திமுக துணை நிற்கும்” எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்