திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது பாலியல் வல்லுறவு குற்றம் எனக் கொண்டால், பெண்கள் தவறான நோக்கங்களுடன் ஆண்களுக்கு எதிராக நிறையப் பொய் வழக்குகள் போடக் கூடும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது
ஆர்ஐடி ஃபவுண்டேஷன் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கம் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியப் பாலியல் பலாத்காரச் சட்டத்தின் கீழ் கணவருக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை ரத்து செய்யுமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஒரு ஆண் தனது 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மனைவியுடன் அவளது அனுமதியின்றி உடலுறவு மேற்கொண்டால் அது பாலியல் வல்லுறவு குற்றமாகாது என இந்தியத் தண்டனை சட்டப்பிரிவு 375 இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விதிவிலக்கை நீக்கினால் பிரிவு 376 இன் கீழ் மனைவியைக் கணவன் பாலியல் வல்லுறவு செய்யும் குற்றங்கள் கையாளப்படும் என்று ஒன்றிய அரசு ஜனவரி 12 அன்று உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005 இன் கீழ், உடல் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டுள்ளன என்று ஒன்றிய அரசு நீதிமன்றத்திடம் சுட்டிக் காட்டியது.
மனைவியின் சம்மதமில்லாமல் கணவன் உடலுறவு கொள்வதைக் குற்றமாக்கியுள்ள மேற்கத்திய நாடுகளைக் கண்மூடித்தனமாக நாம் பின்பற்ற முடியாது என்று ஒன்றிய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
விருப்பம் இல்லையெனில் மறுக்கும் உரிமை பாலியல் தொழிலாளிக்குக் கூட உண்டு, மனைவிக்கு இல்லையா என்று ஜனவரி 14 அன்று நடந்த விசாரணையில் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Source : scroll
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.