Aran Sei

மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன? – செய்திகளின் உண்மைத்தன்மை குறித்த ஆய்வு

மேற்கு வங்கம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதில் 14 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் தோற்ற பாஜக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள்மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தி வருவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் கலவரத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என பாஜகவினர் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இவற்றில் பெரும்பாலானவை போலி என உண்மை கண்டறியயும் தேடலில் தெரியவந்துள்ளது.

தேர்தல் வெற்றியைத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், கத்தி மற்றும் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டாடுவதாக ஒரு 15 வினாடி காணொளியைப் பாஜகவில் சமூக ஊடக பிரிவு தேசிய பொறுப்பாளர் ப்ரீத்தி காந்தி பதிவிட்டிருந்தார். அந்தக் காணோளியில் மக்கள் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

இது தொடர்பாக குவிண்ட் இணையதளம் நடந்திய உண்மை கண்டறியும் சோதனையில், இந்தக் காணொளியை ராஜ் கிரியேஷன் என்ற இன்ஸ்டா கணக்கு செப்டம்பர் 25, 2020 ஆம் தேதி பகிர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

Photo Credit : The Quint

மேலும், இந்தக் காணொளி எதற்காக எடுக்கப்பட்டது என சரியாக தெரியவில்லை. ஆனால் பின்னணி வேறு பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் இந்தக் காணொளியில் திரிணாமுல் பிரச்சாரப் பாடல் பின்னர் இணைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது என அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சி என்ற ஹேஷ்டேக்கில் ஒரு புகைப்படத்தைத் தனது விட்டர் பக்கத்தில் பகிர்ந்த, தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகப் பிரிவின் தலைவர்  சி.டி. நிர்மல்குமார், “மேற்கு வங்கத்தில் கலவரம் நடைபெற்ற இடங்களைப் பார்வையிடப் பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா மே 4 மற்றும் 5 தேதிகளில் மேற்கு வங்கம் செல்ல இருக்கிறார். இதுவரை 5க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர்.” என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், அந்தப் புகைப்படம் 2019 ஆம் ஆண்டு ராமநவமியின்போது ஏற்பட்ட கலவரத்தில் எடுக்கப்பட்டது. அதை அப்போதே ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட பல செய்தி ஊடகங்கள், தங்கள் இணையதளங்களில் செய்தியாக வெளியிட்டுள்ளன என ஆல்ட்நியூஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

மேலும், மேற்கு வங்கம் பிர்பம் பகுதியில், பாஜக மகளிரணியை சேர்ந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியனரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களின் பகிரப்பட்டு வந்தது. திரைப்பட கலைஞர் கங்கணா ரணாவித்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்படுவதற்கு முன்பாக இந்தத் தகவலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தத் தகவல் போலியானது என்றும், இந்த வதந்தியைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாகேந்திர திரிபாதி தெரிவித்துள்ளதாக ஜிநியூஸ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்