Aran Sei

கோவிலுக்குள் தொழுதவர் மீது வழக்கு : நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கம் இல்லை – உயர் நீதிமன்றம் பிணை

Image Credits: The Wire

த்தரபிரதேசம், மதுராவில் உள்ள, நந்த்பாபா கோவில் வளாகத்தில் தொழுகை செய்ததற்காக பைசல் கான் எனும் சமூக ஆர்வலர் நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது, அலகாபாத் உயர் நீதிமன்றம் பைசல் கானுக்கு பிணை வழங்கியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜாமியா நகரைச் சேர்ந்த உத்தரப்பிரதேச காவலர்கள், குதுய் கிட்மத்கர் (வகுப்புவாத நல்லிணக்கத்தை நோக்கிச் செயல்படும் ஒரு அமைப்பு) அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பைசல் கானை, டெல்லியில் வைத்து நவம்பர் 2-ம் தேதி கைது செய்தனர்.

முன் அனுமதியுடன் கோவிலில் தொழுகை செய்தவர் கைது – உத்தர பிரதேச காவல்துறை நடவடிக்கை

குதுய் கிட்மத்கர் அமைப்பு சுதந்திர போராட்ட வீரர் கான் அப்துல் கஃபர் கான் என்பவரால் நிறுவப்பட்டது.

பைசல் கான் ஒரு கோவிலில் நமாஸ் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள், 153 ஏ (எந்தவொரு குறிப்பிட்ட குழு அல்லது வகுப்பினரின் மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவை அல்லது ஒரு மதத்தின் ஸ்தாபகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் மீது விரும்பத் தகாத அவதூறு பரப்புவது அல்லது தாக்குதலில் ஈடுபடுவது), 295 (ஒரு மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன், வழிபாட்டுத் தலம் அல்லது புனிதமான ஒரு பொருளை அழித்தல், சேதப்படுத்துதல் அல்லது சிதைத்தல்) மற்றும் 505 (வேறு எந்தப் பிரிவினருக்கோ அல்லது சமூகத்துக்கோ எதிராகச் சண்டையைத் தூண்டும் நோக்கத்தோடு செய்யும் செயல்) ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் 14 நாள் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார்.

கடந்த நவம்பர் 19-ம் தேதி பைசல் கான் அவரது மூன்று சகாக்களான சந்த் முகமது, நிலேஷ் குப்தா மற்றும் சாகர் ரத்னா ஆகியோருடன் மதுராவில் உள்ள, நந்த்பாபா கோவிலுக்குச் சென்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வைரல் ஆனதற்கு பிறகு கன்ஹா கோஸ்வாமி என்ற பூசாரி புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், “பைசல்கானின் செயல் இந்து உணர்வுகளை புண்படுத்தியது” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அனுமதி பெற்ற பிறகுதான் தொழுததாகப் பைசல் கான் தரப்பில் கூறப்பட்டது.

பைசல் கானின் வழக்கறிஞர் இரண்டு விண்ணப்பங்களை தாக்கல் செய்தார். முன் ஜாமீன் கோரிய ஒரு விண்ணப்பம் பட்டியலிடப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பான முதல் விசாரணை வெள்ளி அன்று நடைபெற்றுள்ளது.

நீதிமன்ற காவலில் இருந்தபோது பைசல் கானுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் மதுராவில் உள்ள கே.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரது குடும்பத்தினருக்கு கவலை ஏற்பட்டுள்ளது. அவரது சகோதரி ஃபாலக், “அவர் இல்லாமல் வாழ்க்கையை கடப்பது ஒரு போராட்டமாக உள்ளது” என்று கூறியுள்ளார். தற்போது, அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதால் குடும்பத்தினர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்று என ஃபாலக் தி வயரிடம் தெரிவித்துள்ளார்.

“வைரல் ஆன புகைப்படங்களை மட்டுமே அடிப்படையாக வைத்துக்கொண்டு விண்ணப்பதாரருக்கு சமூகத்தின் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கம் இருப்பதாகக் கூற முடியாது. அவர் கோயிலின் கருவறைக்குள் நுழையவில்லை. அதற்கு வெளியே பூசாரியின் அனுமதி பெற்று தான் நமாஸ் செய்துள்ளார் என்பது புகைப்படங்களிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது” எனப் பிணை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்