Aran Sei

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் தொடர்பாக பரப்பபடும் தவறான செய்திகள் – உண்மை என்ன?

Credit: The Hindu

காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் வெளியேறியதை அடிப்படையாக கொண்டு  ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. திரைப்படத்திற்கு பல்வேறு மாநிலங்களில் கேளிக்கை வரி விலக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியானதில் இருந்து ஆதரவும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

மேலும், படம் தொடர்பாக பல்வேறு தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த தகவல்கள்குறித்து தேடியபோது உண்மை வேறாக உள்ளது.

”காஷ்மீர் இனப்படுகொலையை ரோட் தீவு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததா?

திரைப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி, மார்ச் 14 தேதி பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ”தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் காரணமாக 90களில் நடந்த பண்டிட்கள் மீதான தாக்குதலை இனப்படுகொலை என அதிகாரப்பூர்வமாக ரோட் தீவு அங்கீகரித்துள்ளது.” என தெரிவித்திருந்தார்.

கடந்த 32 ஆண்டுகளில், உலகில் ஒரு நாட்டின் மாகாணம், இனப்படுகொலையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது இதுவே முதல் முறை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

உண்மைத்தன்மை:

ரோட் தீவு அங்கீகரித்ததாக கூறி இயக்குநர் பதிவிட்ட புகைப்படத்தில் எந்த இடத்திலும், இனப்படுகொலை என்ற சொல் குறிப்பிடப்படவில்லை.

மேலும், ரோட் தீவின் மாநில பிரதிநிதி பிரையன் பாட்ரிக் கென்னடியை பத்திரிகையாளர் ரகீப் ஹமீத் நாயக் தொடர்பு கொண்டு கேட்டப் போது, “இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் இருப்பது திரைப்படத்தின் காட்சியை வெறுமனே அங்கீகரிப்பதற்கான அரசின் மேற்கோள். மேற்கோள் என்பது சிறப்பு நிகழ்வை ஒப்புக் கொள்வதாகும். சபையின் உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தைக் குறிப்பதல்ல” என தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் கொல்லப்பட்ட பண்டிட்களின் எண்ணிக்கை?

1990களில் பயங்கரவாதிகளால் 89 காஷ்மீர் பண்டிட்கள் மட்டுமே உயிரிழந்ததாக, ஸ்ரீநகர் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 20.12.2017 தேதி அப்போதைய மாநிலங்களவை உறுப்பினர் அமர் சிங் கேள்விக்குப் பதிலளித்த உள்துறை அமைச்சகம், “ஜம்மு காஷ்மீர் அரசின் தரவுகளின்படி, 174 காஷ்மீரி பண்டிட்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.” என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இதேப் போன்று, 1989 முதல்2010 வரை 219 காஷ்மீர் பண்டிட்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என 2010 ஆண்டு தி இந்து  நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

படம் பார்த்தபிறகு பாஜக தலைவர்கள் அழுதார்களா?

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தைப் பார்த்தபிறகு, எல்.கே. அத்வானி மற்றும் யோகி ஆதித்யநாத் கண்ணீர் விடுவது போன்ற காட்சிகள் இணையத்தில் பரவியது.

விது வினோத் சோப்ரா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ஷிகாரா திரைப்படம் 2020 ஆண்டு வெளியானது. இந்த படம் எல்.கே. அத்வானிக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தைப் பார்த்தபிறகு அத்வானி அழுதது தான், தற்போது பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளியைப் பிப்ரவரி 7, 2020 தேதி விது வினோத் சோப்ரா பிலிம்ஸ் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் அழுத காட்சி 2017 கோரக்பூரில் தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்வின்போது எடுக்கப்பட்டது.

Source: The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்