Aran Sei

பாசிசத்துக்கு எதிராக செய்தி வெளியிட்ட ரெட் ஃபிஷ் பக்கத்தை முடக்கிய ஃபேஸ்புக் – யாருக்காக செயல்படுகிறது ஃபேஸ்புக்?

நிறவெறி, இனவெறி மற்றும் பாசிசத்துக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த ரெட் ஃபிஷ் இணையதள பக்கம், ஃபேஸ்புக்கின் கொள்கைகளுக்கு முரணாக செயல்படுவதாக கூறி முடக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செய்தி இணையதளமான ரெட் ஃபிஷ், உலகம் முழுவதும் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளையும், மக்களுக்கு சொல்லப்படாத அல்லது மறைக்கப்படும் செய்திகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. ரெட் ஃபிஷ் ஃபேஸ்புக் பக்கத்தை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில், பல்வேறு காலகட்டத்தில், நிறவெறிக்கு, இனவெறி மற்றும் பாசிசத்துக்கு எதிரான செய்திகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதால் ரெட் ஃபிஷ்ஷின் ஃபேஸ்புக் பக்கம் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.

‘மோடி பதவி விலகுங்கள்’ ஹாஷ்டேக்கை தெரியாமல் முடக்கி விட்டோம் – ஃபேஸ்புக் நிறுவனம் பல்டி

இது தொடர்பாக, ரெட் ஃபிஷ் இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த ஜனவரி 27 ஆம் தேதியன்று, ஆஷ்விட்சின் யூத கைதிகள் விடுதலை செய்யப்பட்ட தினத்தை நினைவில் கொள்ளும் வண்ணம், ஜெர்மனியில் நாஜிக்கள் நடத்திய இன அழிப்புகளை பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்தோம். கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி, இத்தாலியில் பாசிச ஆட்சி முடிவுப்பெற்று, சர்வாதிகாரியான முசோலினி சிறைபிடிக்கப்பட்ட நாளை (ஏப்ரல் 28, 1945) குறிக்கும் வகையில் முசோலினி கைது செய்யப்படும் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தோம். கடந்த ஜனவரி 20 அன்று, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாநிலத்தில், வெள்ளை நிற வெறியர்களால் இலத்தீன் அமேரிக்கர் (மெக்சிக்கோவைச் சேர்ந்தவர்) ஒருவர் தாக்கப்படும் காணொளியை பதிவிட்டோம்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று பதிவுகளும் ஃபேஸ்புக்கின் கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி ஃபேஸ்புக்கால் முடக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் நாஜிக்கள் நடத்திய இன அழிப்பு புகைப்படம் நிர்வாணத்தை (நாஜிக்களின் சிறையில் இருந்தவர்கள் சட்டை அணியாமல் இருக்கும் புகைப்படம்) ஊக்குப்படுத்துகிறது என்ற தவறான காரணத்தைக் கூறி, ஃபேஸ்புக் பக்கத்தால் நீக்கப்பட்டது. மற்ற இரண்டு பதிவுகளும் ஃபேஸ்புக்கின் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாக கூறி, ரெட் ஃபிஷ்ஷின் பக்கமே முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது” என்று அறிக்கையில் கூறியுள்ளது.

சார்புடன் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு – மத்திய அரசு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம்

ரெட்பிஷ்ஷின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அந்தோணி பெல்லாங்கர், “இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்கள் சிறைபிடித்தவர்களின் புகைப்படங்கள் நிர்வாணத்தை ஊக்குவிப்பதாக கூறி நீக்கப்பட்டிருப்பது, ஃபேஸ்புக்கின் வழிமுறை (Algorithm) அதனுடைய வேலையை சரியாக செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்தப் பதிவு அரசியல் காரணங்களுக்காக நீக்கப்பட்டிருந்தால், ஃபேஸ்புக் போன்ற நிறுவனம் எந்த அரசியல் கருத்துக்கள் பேசப்பட வேண்டும் எதைப் பேசக் கூடாது என்பதை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பது குறித்து நாம் ஆழ்ந்த கவலைக் கொள்ள வேண்டும். இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது” என்று கூறியுள்ளார்.

பஜ்ரங் தளத்தை ஃபேஸ்புக்கில் தடை செய்யாதது ஏன்? – நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி

ரெட் ஃபிஷ் ஃபேஸ்புக் பக்கத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வா எனும் ஹேஷ்டேக் மூலம் ரெட் ஃபிஷ்  நிறுவனம் தன்னுடைய சமூக வலைதளங்களில் போராடி வரும் நிலையில் பலரும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ரெட் ஃபிஷ் நிறுவனத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்