Aran Sei

மல்லையாவை ஒப்படைக்க முயற்சி – ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல்

Image Credits: Quartz

விஜய் மல்லையா மீது இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்து வரும் ரகசிய சட்ட நடவடிக்கை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று அந்நாட்டுத் துாதரக அதிகாரி தெரிவித்துள்ளார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவின் பல்வேறு வங்கிகளிலிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சட்ட சிக்கல்கள் காரணமாக அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் ரகசிய நடவடிக்கைகள் – உச்ச நீதிமன்றம் கேள்வி

இந்நிலையில், “விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கில் சில ரகசிய சட்ட நடவடிக்கைகள் இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெறுகிறது” என்று  என்டிடிவி  செய்தி வெளியிட்டுள்ளது.

“மல்லையாவை ஒப்படைப்பதற்கு முன் சில சட்ட சிக்கல்களை முடிவு செய்ய வேண்டும். இது ஒரு சட்ட வழக்கு. ஆகையால், இது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியவில்லை” என்று இங்கிலாந்து துாதரக அதிகாரி ஜான் தாம்சன் தெரிவித்துள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

“இந்த விவகாரம் எப்போது முடிவுக்கு வரும் என்பதை கணிக்க முடியவில்லை. இருப்பினும், இதனை முடிந்த அளவுக்கு விரைவாக முடிப்பதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க 2018-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிரான அவரது மேல்முறையீட்டை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவின் வழக்குத் தோல்வி அடைந்தவுடன் அவரை ஒப்படைக்க இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்