Aran Sei

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் – சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Image Credits: DNA India

னியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கக்கோரிய வழக்கில் சுகாதாரத்துறைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த அஞ்சலை என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி எனது கணவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது, இதையடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, பரிசோதனை முடிவில் எனது கணவருக்குக் கொரோனா தொற்று உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த சட்டம் தேவை – உள்துறை நிலைக் குழு அறிக்கை

“இதைத் தொடர்ந்து, முன்பனமாக ரூ.50,000 செலுத்தினோம். 2 நாட்கள் கழித்து ரூ.2,20,000 கட்ட சொன்னார்கள். இதனால் கணவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் என் கணவருக்குக் கொரோனா தொற்று இல்லை என்றார்கள். இருப்பினும் நெஞ்சுவலி ஏற்பட்டு நவம்பர் 28-ல் கணவர் உயிரிழந்தார்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மற்றும் கொரோனா தொற்று பரிசோதனைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ளதை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்” என அதில் கூறப்பட்டுள்ளது.

“எனவே, கொரோனா தொற்று உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்க அரசு நிர்ணயம் செய்த தொகையைத் தனியார் மருத்துவமனை வசூலிப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார். மனு தொடர்பாகச் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்