Aran Sei

ஹைட்ரோ கார்பன் திட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு – தமிழ்நாடு அரசு உத்தரவு

ஹைட்ரோ கார்பன் திட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட வல்லுநர் குழு அமைத்துத் தமிழ்நாடு அரசு உத்தரவு  உத்தரவிட்டுள்ளதற்கு  மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்பட்ட, இனி ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுனர் குழுவை மறுகட்டமைப்பு செய்துள்ளது. அதற்கான நோக்கங்களையும், பொறுப்புகளையும் வரையறுத்துள்ளது. இதை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வரவேற்கிறது. உரிய காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூட்டமைப்பு பாராட்டுகிறது”. என்று தெரிவித்துள்ளது.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் கிணறுகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 5 கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி அனுமதி கோரிய போது, அதை  அரசு நிராகரித்து  தமிழ்நாடு முழுவதுமே எண்ணெய் – எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை என்று அறிவித்தது என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, “வேளாண்மையைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மை நிதிநிலை அறிக்கை அளிக்கப்பட்டது, இதைத்தொடர்ந்து இப்போது ஹைட்ரோகார்பன் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது”. என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் , “எண்ணெய்க் கிணறு துரப்பண தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், இரசாயன பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலத்தடி நீரின் அளவால்  நிலத்தின் மட்டம் கீழிறங்கி தாழ்ந்து போகுமா?, மற்றும் நிலத்தடித் தட்டுகள் இடம்பெயர்ந்து நகருமா? என்ற ஆய்வுகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் எப்படி பாதிக்கப்படும்? தமிழ்நாட்டின் உணவு உறுதிப்பாடு எந்த அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் ? என்ற ஐந்து ஆய்வு நோக்கங்களும், பொறுப்புகளும் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளன”. என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
எனவே,2020ஆம் ஆண்டு சட்டம் காவிரிப்படுகையின் ஒரு பகுதியை மட்டுமே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, இப்போது இந்த குழுவின் அறிக்கை வாயிலாக தமிழ்நாடு முழுவதுமே பாதுகாப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பினர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்,-.
அதுமட்டுமின்றி, “தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்டத் தொழில்நுட்ப வல்லுநர் குழு தமிழ்நாட்டின் மண்ணையும், நீரையும், சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வாதாரங்களையும், தமிழ் நாட்டின் உணவு உறுதிப்பாட்டையும் பாதுகாக்க உதவும் என்றும் மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்