Aran Sei

வெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன?

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வந்த மக்களை ஆளும் அரசு அகற்றியிருக்கிறது. சில பத்தாண்டுகளாக சென்னயிலிரிந்து உழைக்கும் மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்படுவது தொடர்கதையாகியுள்ளது. வெளியேற்றப்படும் மக்களில் ஒப்பீட்டளவில் பட்டியல் சாதியினர் அதிகம் என்கிறது நம்முடைய கள ஆய்வு. பிளாக் டவுன் எனப்படும் சென்னையின் ஒரு பகுதி ’பெரும்பறைச்சேரி’ என்று பழைய ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதன் வழியே இங்கு வாழ்ந்த பெரும்பாண்மை மக்கள் யாரென்று அறிய இயலும். செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், கண்ணகி நகர் ஆகிய பகுதிகளை ஒட்டிப் பெருநிறுவனங்களுக்கு துப்புரவு தொழில் உள்ளிட்ட கடைநிலை வேலைகளைச் செய்வதற்காகத்தான் ஆளும்/ ஆண்ட அரசுகள் அவர்களை அங்குச் சென்று குடியமர்த்த காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

தங்களின் இருப்பிடங்களை விட்டு 30/40 கிலோமீட்டர் தாண்டிக் குடியமர்த்தும்போது போது மக்களின் தொழில், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் உளவியல் சார் பிரச்சினைகளும் உருவாகிறது என்பதும் நாம் அறிந்ததே. மக்களைக் குடிசையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது நம்முடைய யோசனையன்று. அவர்களுக்குச் சுகாதாரமான வீட்டையும் வாழ்க்கையையும் ஏற்பாடு செய்து தர வேண்டியது அரசின் கடமை. இவர்களைச் சென்னைக்கு வெளியே விரட்டுவதை விட, சென்னையில் அரசுக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர்கள் உள்ள நிலையில் குடிசை வாழ்மக்களை அங்கு மீள்குடியமர்த்தலாம். புளியந்தோப்பு, கே.பி.பார்க் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேல் தனி வீட்டில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா இல்லை. அரசு நினைத்தால் எப்போது வேண்டுமோ அவர்களை விரட்டியடிக்கும். மக்கள் நலன் காக்கும் அரசு அவர்களுக்கு மனைப்பட்டா வழங்குவது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

பெகசிஸ்: பேரழிவு விளைவுகளை தடுக்க அரசியல் நடவடிக்கைகளால் மட்டுமே முடியும் – எழுத்தாளர் அருந்ததிராய்

சென்னையில் உள்ள விளிம்புநிலை மக்களை திமுக மற்றும் அதிமுக ஆட்சிகாலங்களில் அதிகமாக வெளியேற்றுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. அந்த நேரத்தில் மட்டும் எதிர்க் கட்சிகள், தலித் அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் பேசுவதும் மற்ற காலங்களில் அதற்கான நிரந்தர தீர்வை முன்வைத்து எந்த விதமான ஆக்கபூர்வமான பணிகளையையும் யாரும் செய்யவில்லை.  ஆளும் அரசு மக்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் என்கிற புதிய பட்டத்தை வழங்கியுள்ளது. பட்டியல் சாதி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை உண்மையில் ஆக்கிரமித்திருப்பவர்களை அப்படி சொல்ல ஆளும் வர்க்கத்திற்கு வாய் இருக்குமா? பல கி.மீ. தாண்டிக் குடியமர்த்தப்படும் மக்கள் சமூகத்தால் குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள் என்று மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தன்னுடைய சிறை அனுபவத்திலிருந்து சொல்வதாக  அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பின்னணியில் சென்னையில் உள்ள குடிசை பகுதியில் வாழும் மக்களை 1945-1946 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி நிர்வாகம் எப்படி கையாண்டுள்ளது என்பதை நாம் இங்கு இத்தருணத்தில் நினைவு கூர்வது மிக அவசியமான ஒன்றாகும்.

அழுகுரலின் நெடுங்கதை – கொரோனா காலமும் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்களும்

சிவராஜ் மற்றும் ஜெ.சண்முகம் பிள்ளை 5-7-1932 முதல் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராக நியமிக்கப் பட்டனர். 1938 வரை நியமன உறுப்பினராக இருந்த சிவராஜ் 11-11-1938 முதல் மாநகராட்சி மன்ற உறுப்பினராக ஒதுக்கப்பட்ட வார்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். 1938 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குடிசை பகுதி மேம்பாட்டு குழுவில் N. சிவராஜ் ,ஜெ.சிவசண்முகம் பிள்ளை, கோதண்ட ராம முதலியார் மூவரும் உறுப்பினராக இருந்தனர். N. சிவராஜ் அவர்கள் குடிசை பகுதி மேம்பாடு,  அவர்களின் கல்வி மற்றும் பொருளாதாரம் குறித்து குடிசை மேம்பாட்டு குழுவின்  கூட்டத்தில் விரிவாக பேசியுள்ளார்.

சிவராஜ் அவர்கள் 20 -11 -1945 அன்று சென்னை மாநகராட்சியின் மேயராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த இரண்டு மாதத்தில்  29-01-1946 ஆம் ஆண்டு குடிசைப்பகுதி அபிவிருத்திக்கு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுக்குத் தலைவர் N. சிவராஜ், அமைப்பாளராக எம்.தாமோதரன் நாயுடு மற்றும் உறுப்பினர்கள் சிலரும் நியமிக்கப்பட்டனர்.

டெல்லியில் தகர்க்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயமும் இந்தியக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் – அ.மார்க்ஸ்

இந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் குடிசை பகுதிகளைச் சுகாதாரத்தோடு அமைத்து மக்களுக்கு வழங்கத் திட்டம் தீட்டினார். அப்போது சென்னையில் 200 க்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகள் இருந்தன. இது சென்னை மக்கள் தொகையில் 5 யில் 1 பங்கு ஆகும். அதிலும் குறிப்பாக 1941 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி 1,03,338  பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் சென்னையில் மாநகரில் வசித்தனர்.

தொழில் புரிவதற்கு ஏதுவாக உள்ள இடங்களில் வீடுகள் கட்டி கொடுக்க சிவராஜ்  முயற்சி எடுத்தார். அதன் முதல் கட்டமாக சிவராஜபுரம் குடிசை பகுதியைச் சீர்திருத்தி அமைத்தார். கோடம்பாக்கம், பழைய சிலேட்டர் ஹவுஸ் சாலை-பிரிவு 19, ரிட்சி தெரு, வால்டாக்ஸ் ரோடு, கஜபதி காலடி தெரு, திருவல்லிக்கேணி, இப்ராகிம் சாகிப் தெரு போன்ற பகுதிகளில் குடியிருப்புகளைக் கட்டி தந்தார். மக்கள் குடியிருந்த பகுதிகளில் பொது கழிப்பிடம் கட்டி கொடுக்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

மாநகராட்சி ஏழை மக்களுக்காக ஒதுக்கிய நிதிக்குக் கூடுதலாக செலவானாலும் அதையும் தாண்டி நிதி நெருக்கடியைச் சமாளித்து மக்களுக்கு குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த ஆட்சி காலம் இரண்டாம் உலக போரின் முடிவுற்ற காலம் என்பதால் மூன்று லட்சக்குக்கும்  அதிகமான மக்கள் வீடு மற்றும் உணவு இல்லாமல் பாதசாரிகளாக சென்னையில் வாழ்ந்தனர். அதனால் கூடுதலாக 5000 வீடுகள் கட்டி தர அரசுக்குத் தொடர் அழுத்தம் தந்தார்.

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

புதிய குடியிருப்பு அமைக்கப்பட்ட இடங்கள் மற்றும் மற்ற குடிசை பகுதிகளில் என குழந்தைகள் படிப்பதற்கு 16 குடிசை பள்ளிகளை ஏற்படுத்தினார். இதன்மூலம்  மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை 41,441 லிருந்து 47,202 ஆக உயர்ந்தது. மேலும் வருகை விழுக்காடு பள்ளிகளில் 77.4% லிருந்து 80.2%  உயர்ந்தது. இதில் பட்டியல் சமூக  குழந்தைகள் எண்ணிக்கை 6596 லிருந்து 8212 ஆக உயர்ந்தது. மாணவர்களின் எண்ணிக்கை கூடுதல் காரணமாக பள்ளி நேரத்தை இரண்டாக பிரித்து ஷிப்ட் முறையைக் கையாண்டது குறிப்பிடத்தக்கது.

சிவராஜ் மேயராக இருந்த ஓராண்டுக்குள் நான்கு  பூங்கா, ஆறு மைதானம், கூவம் நதி சீரமைப்பு, மக்கள் பூங்கா, மக்கள் அரங்கம் தற்போது நேரு விளையாட்டு அரங்கம், பிச்சைக்காரர்கள் விடுதி, அனாதை விடுதி, முதன் முதலாக பள்ளி தினம் அல்லது பெற்றோர் தினம், படிக்கும் அறைகள் என பல பணிகளைச் செய்துள்ளார். சிவராஜ் அவர்கள் மேயராக இருந்த அதேசமயத்தில் அகில இந்திய செடியூல்ட் கேஸ்ட் பெடரேஷன் (AISCF) அமைப்பின் தலைவராகவும் இருந்தார். ஒரு வகையில்  சிவராஜ் மேயராக இருந்த காலத்தைப் பெடரேஷன் ஆட்சி காலம் என்றே கூறலாம். அதேசமயம் 1945-1946 காலகட்டம் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றினார்.

வரலாற்றின் நினைவில் ஒரு பயணம் – பாபாசாஹேப்பின் பெடரேஷன் கட்சியும் அதன் செயல்பாடும்

இப்படியான குடியிருப்புகள் அகற்றுவது தொடர்பாக சிறந்த முன்னுதாரனம் நமக்கு இருக்கும்போது, ஆளும் அரசு சென்னையில் வசிக்கும் விளிம்புநிலை மக்களைச் சென்னையை விட்டு வெளியேற்றுவது மோசமான ஒன்று. மாற்று இடம் தருவதாகச் சொல்லி சென்னையை விட்டு அகற்றுவதை எவ்விதத்திலும் மக்களுக்குப் பயனளிக்காது. அவர்கள் தற்போது வாழும் சுற்றுவட்டாரத்திற்குள்ளே வாழ இட வசதி செய்து தர வேண்டும் என்பதே மக்களின் எண்ணம்.

குடிசைப்பகுதி மக்களுக்கு எவ்விதமான திட்டங்களை அரசு வைத்துள்ளது என்பதை பொதுவெளியில் அறிவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். சென்னையில் பெருமழை வரும்போது ஆற்றங்கரையோரம் உள்ள மால், மருத்துவமனை உள்ளிட்ட இடங்கள் தண்ணீரில் மூழ்குவதை கடந்த காலங்களில் கண்டோம். அந்த ஆற்றங்கரையோர கட்டிடங்கள் குறித்து விசாரணை அமைக்க வேண்டும். இந்த ஐந்தாண்டிற்குள் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் உரிய மக்களுக்கு மனைப்பட்டா, குடிசைகளில் வாழும் மக்களுக்குச் சுகாதாரமான இடம் வழங்க வேண்டும் என்பது மக்கள் மீது அக்கறை கொண்ட எல்லோரின் கனவாக இருக்கிறது. ஆளும் அரசால் கனவு நிறைவேற்றப்படுமா?

கட்டுரையாளர்: அருள் முத்துக்குமரன்

ஓணம் பண்டிகை: பௌத்தப் பண்பாட்டு வரலாறு நூலின் ஆசிரியர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்