Aran Sei

‘ஆரோக்கிய சேது’ தகவல்களை பாதுகாக்க தவறிய ஒன்றிய அரசு – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்

‘ஆரோக்கிய சேது’ செயலி வழியாக பெறப்பட்ட லட்சக்கணக்கானோரின் தகவல்களை இந்திய ஒன்றிய அரசு பாதுக்காக்க தவறியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக தி குயின்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சுயாதீன பத்திரிகையாளர் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்ட செயல்பாட்டாளர் சௌரவ் தாஸ், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மனுவில் இவ்வாறு தெரியவந்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

டவுன்லோடில் சாதனை செய்த ஆரோக்கிய சேதுவின் பயன் தான் என்ன?!  

மேலும், ஆரோக்கிய சேது செயலி வழியாக பெறப்படும் தகவல்களை பாதுகாக்கும் ‘ஆரோக்கிய சேது தரவு அணுகல் மற்றும் அறிவு பகிர்வு நெறிமுறை 2020’ இன் விதிகளை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த தவறியுள்ளதாகவும் தி குயின்ட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2 ஏப்ரல்2020 அன்று,  கொரோனா தொற்று பரவலைக் கண்டறிய ஆரோக்கிய சேது செயலியைத் தேசிய தகவல்தொழிநுட்ப மையம் உருவாக்கியது.

இந்தச் செயலியைத் தற்போது வரை 160 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருவதாகவும், கொரோனா தொற்று பரவலைக் கண்டறியும் விதமாக உருவாக்கப்பட்டதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இந்நிலையில், எண்ணற்ற தகவல் பாதுகாப்பு வல்லுநர்கள், செயலியின் தகவல் பாதுகாப்பு நடைமுறைகள்குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், கடந்த மே 11 2020 அன்று ‘ஆரோக்கிய சேது நெறிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டதாக தி குயின்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கண்காணிப்பு – ‘ஆரோக்ய சேதுவை உருவாக்கியது யார்?’

இந்த நெறிமுறையின் மிகமுக்கிய நோக்கம் ஆரோக்கிய சேது செயலி வாயிலாக பெறப்படும் தகவல்களையும், தனிப்பட்ட / தனிநபர் அல்லாத தரவின் பகிர்வு ஆகியவற்றை நிர்வகிக்கவும், மேலும், இது அரசு நிறுவனங்கள், மூன்றாம் தரப்பினர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் தரவைப் பகிர்வதற்கான அபராதங்கள் மற்றும் கடமைகள் குறித்தும் தெரிவிப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லால், ஆரோக்கிய சேது தரவு அணுகல் மற்றும் அறிவு பகிர்வு நெறிமுறை 2020 என்பது ஒன்றிய அரசு இயற்றிய சட்டமோ, கொள்கையோ அல்ல என்றும் தி குயின்ட் செய்தி கூறுகிறது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 1 2020 அன்று பத்திரிகையாளர் சௌரவ் தாஸ், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் வழியாக, தேசிய தகவல்தொழில்நுட்ப மையம் முக்கியமான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கிறது.

ஆரோக்கிய சேது தரவு அணுகல் மற்றும் அறிவு பகிர்வு நெறிமுறை 2020′ பத்தி 6(c) மற்றும் 7(b) ன் படி, எந்தத் தகவல் யாருடன் பகிரப்பட்டாலும் முறையான தகவலின் வகை, பகிரப்பட்ட நேரம், எந்தக் காரணத்திற்காக அந்தத் தகவல் பெறப்பட்டது, மூன்றாம் தரப்பினருடன் தகவல் பரிமாறப்படுவதற்கு தடை ஆகியவற்றை உறுதிபடுத்துவதை கூறுவதாகவும் தி குயின்ட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி கலவர வழக்கில் உமர் காலித்துக்கு பிணை – ஆரோக்கிய சேது செயலியை நிறுவும்படி நீதிமன்றம் உத்தரவு

ஆனால், இந்த நெறிமுறைக்கு மாறாக, தகவல் பரிமாறப்பட்டது குறித்து அரசிடம் பொதுபட்டியல் மட்டுமே உள்ளதாகவும், குறிப்பிட்ட தகவல் நிரல்படுத்தப்பட்ட பட்டியல் இல்லை என்றும் தெரியவந்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், எந்த மூன்றாம் தரப்பினருடன் என்ன காரணத்திற்காக ஆரோக்கிய சேதுவின் தரவு பகிரப்பட்டது எனபது குறித்து அரசின் பொதுபட்டியலிலும் குறிப்பிடப்படவில்லை. மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த வேறொரு மனுவில் அதுகுறித்து கேள்வி எழுப்பிய போதும், எந்த நிறுவனத்துடன் பகிரப்பட்டது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை என்றும் தி குயின்ட் செய்தி கூறுகிறது.

அதுமட்டுமல்லாது, ஆரோக்கிய சேது செயலி வாயிலாக சேகரிக்கப்பட்ட தரவுகளை மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளும்போது, பகிரப்பட்ட தரவுகளை அவர்கள் எந்த காரணத்திற்காகவும் வேறொருவருக்கு வழங்கக் கூடாது என்ற நெறிமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது சௌரவ் தாஸ் பெற்ற தகவலில் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் செயல்பாடுகள் – அறிவியல் வல்லரசு என்பது பகல்கனவே

மேலும், பெறப்பட்ட தகவல்கள் யாருடைய தனிப்பட்ட தகவல்கள் என்பதை மூன்றாம் தரப்பினர் கண்டறியாத வகையில் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய, ஒன்றிய அரசின் அறிவியல் ஆலோசகரால் நெறிமுறை நடைமுறைக்கு வந்ததிலிருந்து 6 மாதங்களுக்குள் வல்லுநர் குழு நியமிக்கப்பட வேண்டும் என்று தி குயின்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை வல்லுநர் குழு அமைக்கப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் தேசிய தகவல்தொழில்நுட்ப மையம், இந்தியாவிற்கென்று தகவல் பாதுகாப்பு சட்டம் இல்லாத நிலையில் லட்சக்கணக்கான மக்களின் தகவலைப் பாதுக்காக்க தவறியுள்ளதாக தி குயின்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதே போன்ற, கடந்த ஆண்டு மே – ஜூலை வரை ஆரோக்கிய சேது செயலியின் விளம்பரத்திற்காக ஒன்றிய அரசு 4.15 கோடி ரூபாய் செலவு செய்தது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்