Aran Sei

கும்பமேளாவில் நடைபெற்ற கொரோனா போலி பரிசோதனைகள்: ‘நீதிதுறை விசாரணையே சரி’ – மோதும் உத்தரகண்ட் பாஜக தலைவர்கள்

கும்பமேளாவில் கொரோனா கண்டறிவதில் போலியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது தனது பதவிக்காலத்திற்கு முன்னர் என்றும், இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் உத்தரகண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் தெரிவித்த நிலையில், அவருக்கு முந்தைய முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், விசாரணை ஒருதலைபட்சமாக நடக்கலாம் என்றும் நீதிதுறை விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரகண்ட் மாநில ஹரித்வார் கும்பமேளாவின் போது மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனைகளில் மோசடி நடைபெற்றதாக பதியப்பட்ட வழக்கை விசாரிக்க, நேற்று முன் தினம் (ஜூன் 18),  ஹரித்வார் மாவட்ட காவல்துறை சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளது.

‘கும்பமேளாவில் போலியாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகள்’: உத்தரகண்ட் பாஜக அரசு மக்களைப் காக்கத் தவறிவிட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

அதற்கு முன்னர், ஜூன் 17 ஆம் தேதி, ஹரித்வார் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியின் புகாரின் பேரில், அம்மாவட்டத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீஸ் நிறுவனம் (எம்.சி.எஸ்) மற்றும் டெல்லியைச் சேர்ந்த லால் சந்தானி ஆய்வகம், ஹிசாரை சேர்ந்த நல்வா ஆய்வகம் ஆகிய இரண்டு ஆய்வகங்கள் மீது கொரோனா சோதனைகளில் மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு லட்சம் கொரோனா பரிசோதனைகளில், 90,000 பேருக்கு தொற்று இல்லை என்று சான்று அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள், ஏறத்தாழ 36,000 சான்றுகள் போலியானவை என்று கூறப்படுகிறது.

கும்பமேளா போலி கொரோனா பரிசோதனைகள் விவகாரம் : சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த உத்தரகண்ட் காவல்துறை

இந்நிலையில், நேற்று (ஜூன் 19), சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய திரிவேந்திர சிங் ராவத், “இந்த வழக்கு விசாரணைகளில் அரசு நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை குறித்து மக்களுக்குச் சந்தேகம் உள்ளது. சிறப்பு விசாரணை குழுவானது கடந்த காலங்களில் சிறப்பாக செயலாற்றியுள்ளது. ஆனால், இவ்விவகாரம் முந்தைய பதவிக்காலத்தில் நடந்தது என்று கூறப்பட்ட பின்னர், இந்த விவகாரம் இப்போது அதிக முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எனவே, விசாரணை ஒருதலைபட்சமாக நடக்கலாம் என்ற அச்சம் மக்களுக்கு இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,“மாநிலத்தில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரிகள் விசாரணையை நடத்துவார்கள் என்பதால், அதன் வெளிப்படைத்தன்மை குறித்து மக்களுக்குச் சந்தேகம் இருக்கலாம். ஆகவே, நீதித்துறையின் விசாரணை இந்த அச்சங்களைய முடிவுக்குக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், மக்கள் நீதித்துறையை அதிகம் நம்புகிறார்கள்.”  என்று அவர் கூறியுள்ளார்.

‘முதலில் கும்பமேளா, இப்போது புனிதயாத்திரை; தவறுகளிலிருந்து எதையும் கற்கவில்லையா?’ – உத்தரகாண்ட் அரசிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

உங்களது ஆட்சிக் காலத்தில்தான் கொரோனா தொடர்பான போலி பரிசோதனைகள் நடந்ததாகக் கூறிய திராத்தின் கருத்துகுறித்து செய்தியாளர்கள் கேட்கையில், விசாரணையில் எல்லா உண்மைகளும் வெளிவரும் என்று திரிவேந்திர சிங் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரகண்ட்டில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இந்தாண்டு மார்ச் 10 ஆம் தேதி, ஹரித்வார் கும்பமேளா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திரிவேந்திர சிங் ராவத்துக்கு பதிலாக தீரத் சிங் ராவத் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source; indianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்