அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நேற்று (பிப்ரவரி 3) உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஹுவா மொய்த்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அந்த உரையில் அவர் கூறியது,
பாஜக அரசு பொறுப்பேற்ற கடந்த சில ஆண்டுகளில் எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாகவும், 160 நாடுகள் கொண்ட மனித சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 17 இடங்கள் சரிந்து 111 ஆவது இடத்திற்கு குறைந்துள்ளது. உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் 180 நாடுகளில் இந்தியா 142வது இடத்தில் உள்ளது என்றும், இன்று பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டம், இஸ்லாமியப் பெண்களை ஏலம் விட்ட ‘புல்லி பாய், சுல்லி டீல்ஸ் செயலி பற்றியும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்போது அவநம்பிக்கையோடு இருப்பதையே பெகாசஸ் உளவு செயலி பிரச்சினை வழியே புரிந்து கொள்ளமுடிகிறது என்று நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார்.
தனது சொந்த மக்களைப் பல ஆண்டுகளாக உளவு பார்க்க மக்களின் வரிப் பணத்தையே செலவழித்துள்ளதை வெளியில் கொண்டு வந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பொய் சொல்கிறது, தி வயர் பொய் சொல்கிறது, பிரெஞ்சு அரசாங்கம் பொய் சொல்கிறது, ஜெர்மன் அரசாங்கம் பொய் சொல்கிறது, அமெரிக்க அரசாங்கம் பொய் சொல்கிறது. ஆனால் பாஜக அரசு மட்டுமே பெகாசஸ் பற்றிய உண்மை பேசுகிறது என்று ஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தாக்குதல்கள் நடத்துவது, இந்து அடிப்படைவாதிகளால் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தாக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது என்றும், ஐஏஎஸ் நியமன விதிகளை மாற்றம் கொண்டு வருவது மாநில அரசுகளின் அதிகாரத்தை ஒடுக்குவதற்கான ஒன்றிய அரசின் கடுமையான நடவடிக்கை என்று கூறி அதனைக் கடுமையாக எதிர்த்தார்.
ஒன்றிய அரசு இந்திய மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து நாங்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், யாரைக் காதலிக்க வேண்டும் என்று கட்டுப்படுத்துகிறது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வ.உ. சிதம்பரம் பிள்ளை போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை வெறும் உதட்டளவில் தான் ஒன்றிய அரசு உச்சரிக்கிறது. அதே சமயம் சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரர் என்றும், ஆங்கிலேய அரசுக்கு அவர் மன்னிப்பு கடிதம் எழுதியதை மாஸ்டர் பிளான் என்றும் ஒன்றிய அரசு கூறுகிறது.
இந்தியாவில் அனைத்து மதங்களையும் பாரபட்சமின்றி சமத்துவமாக நடத்த வேண்டும் என்று கருதிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று பேசிய ஹரித்துவார் தர்ம சன்சத் நிகழ்ச்சியை நேதாஜி அங்கீகரித்திருப்பாரா? என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் ஹுவா மொய்த்ரா எழுப்பினார்.
மோடி அரசாங்கம் “வரலாற்றை மாற்ற முயல்கிறது. எதிர்காலத்தைப் பற்றி பயம், நிகழ்காலத்தின் மீது அவர்களை அவநம்பிக்கை கொள்ள வைத்துள்ளது. 20% மக்களுக்கு எதிரான 80% மக்களின் போர் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு, நமது குடியரசைத் தகர்க்கும் அபாயத்தைத் தொடங்கியுள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.