Aran Sei

‘இராமே ஆண்டாலும்.. இராவணன் ஆண்டாலும்’ – : காளை + விவசாயம் + அப்பாவி கிராமம் + ஊழல் அரசியல்வாதிகள் – ஆய்வே இல்லாத ஒரே பார்முலா!  

`இராமே ஆண்டாலும்.. இராவணன் ஆண்டாலும்’ என்ற தலைப்பில் எந்த ஆட்சி வந்தாலும் கிராம மக்களின் வாழ்வாதாரம் முன்னேறுவதில்லை என்ற கருத்தோடு வெளிவந்திருக்கிறது நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் வெளியாகியுள்ள புதிய திரைப்படம். `இராமே ஆண்டாலும்.. இராவணன் ஆண்டாலும்’ இளம் தம்பதி ஒன்றின் காளை மாடுகள் காணாமல் போவதாகத் தொடங்கும் கதையில், அரசியல்வாதிகள், கிராம வாழ்க்கை, விவசாயம், ஊடக அரசியல் என ஒரு என்சைக்ளோபீடியாவாகத் தன்னை முன்னிறுத்த முயன்றிருக்கிறது.

அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகியிருப்பதால் அனைத்து இந்தியர்களுக்குமான படமாகவும் இது உருவாகியிருக்கிறது. அதன் நீட்சியாக, இதில் காட்டப்படும் அரசியல்வாதிகள் எந்த வித அறிவும் அற்றவர்களாக, ஊடகங்கள் முன் ஏதாவது உளறுபவர்களாகவும், கிராமங்கள் பாதிக்கப்படுவதன் பின்னணியில் இத்தகைய அரசியல்வாதிகளின் ஊழல் மட்டுமே பிரதானப் பிரச்னையாகவும் இருப்பதாகவும் இந்தப் படம் சித்தரிக்கிறது. திராவிடத் தேர்தல் கட்சிகள் மீது நமக்கும் விமர்சனம் இருந்தாலும், மேல்தட்டுப் பொதுப் புத்தியில் இருந்து கிராமங்களைப் போற்றிப் பாடி அணுகுவதும், அதன் வழியாக திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளை `ஊழல்வாதிகள்’ என விமர்சிப்பதும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதன் நீட்சியாக, `இராமே ஆண்டாலும்.. இராவணன் ஆண்டாலும்’ படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பிரச்னைகள் இருப்பது உண்மை. அரசியல்வாதிகள் அதிகாரத் திமிரோடு நடந்துகொள்வதும் உண்மை. ஊடகங்கள் செய்திகளைச் சரியாகக் கையாளாமல் இருப்பதும் உண்மை. ஆனால் இவற்றை உண்மையாகவே ஆராய்ந்து விமர்சனம் செய்து, அவற்றால் நிகழும் விளைவுகளைப் படைப்புகளாக மாற்றுவதோ, அவற்றிற்கு நேர்மையாக தீர்வுகளை முன்வைப்பதோ நல்ல சினிமாவாக இருக்கலாம். ஆனால் இவற்றை ஏதோ வெற்றிப்படத்திற்கான ஃபார்முலாவாகத் தமிழ் சினிமா இயக்குநர்கள் அணுகிக் கொண்டிருக்கின்றனர்.

`இராமே ஆண்டாலும்.. இராவணன் ஆண்டாலும்’ படத்தில் காளை, மழையின்றி காய்ந்துபோன விவசாய நிலங்கள், தனியாளாக ஊர்க் குளத்தைத் தூர்வாறும் முதியவர், பள்ளிக்குச் செல்ல முடியாத சிறுமி, ஊடகங்கள் முன் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளுக்காக மக்களின் செய்திகளைக் கைவிடும் ஊடகங்கள் எனப் பொதுவில் தொடர்ந்து பேசப்பட்ட அதே விவகாரங்களை இயக்குநர் அரிசில் மூர்த்தி தனது கண்ணோட்டத்தின் அடிப்படையில் இயக்கியுள்ளார். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் இத்தகைய விவகாரங்களை இயக்குநரின் கண்ணோட்டத்தால் எந்தத் தீர்வும் முன்வைக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக அவற்றை நகைப்புடன் கூடிய வசனங்களால் சுட்டிக்காட்டி, பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெறுவதே பிரதானமாக இருக்கிறது. சமீப ஆண்டுகளில் பல திரைப்படங்கள் இதே பார்முலாவை முன்வைத்து, கல்லா கட்டியிருக்கின்றன. இப்படிப்பட்ட கிராமம்/ விவசாயம்/ ஊழல் மாடல் சினிமா என்பது தமிழ் சினிமாவின் ஒரு ஜானராகவே உருவாகி வருகிறது.

Raame Aandalum Raavana Aandalum

`இராமே ஆண்டாலும்.. இராவணன் ஆண்டாலும்’ படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் தனித்தனி ட்விட்டர் பதிவுகளின் அளவுக்கு, தொடர்ந்து ட்வீட்டுகளாக அடித்துத் தள்ளுகிறார்கள். காளையைத் தொலைத்த துக்கத்திலும் ரம்யா பாண்டியன் காளைகளின் அரசியல் குறித்து பேசுகிறார்; ரேஷன் கடையின் கொடுமை குறித்து பேசுகிறார். Political satire என்ற பெயரில் கிராமங்களை மிகவும் அப்பாவித்தனமாகவும், நகரங்களில் இருப்பவர்களும், அரசியல்வாதிகளும் கிராம மக்களின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் சித்தரிப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். கிராமத்தில் வெள்ளந்தி மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதும், தொழில்நுட்ப வளர்ச்சியில் இருந்து தள்ளி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை என்றாலும், அதனைப் பொதுமைப்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது.

திருவிழாவில் காளைகளுக்கான அலங்காரப் பொருள்கள் விற்கும் குஜராத்தி சேட்டு ஒருவர் வருகிறார். இப்படியான விழாக்களில் இது போன்ற பனியா பின்னணியைக் கொண்ட சேட்டுகள் சில்லறை கடைகள் வைத்திருப்பார்கள் என்பதே அபத்தம். மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 1000 ரூபாய் நோட்டை அவரது கையில் திணித்து, அவரை அறைந்து சில்லறை மாற்றிக் கொண்டு போகிறார்கள் தமிழ்நாட்டின் கிராமத்தைச் சேர்ந்த ஏழைகள். அடுத்த காட்சியில், `துக்ளக்’ படிக்கும் கிராமவாசியை அறிவாளி எனக் கூறி, கிராமத்திற்குள் அழைத்துச் செல்கிறது ஊடகவியலாளர்களின் குழு.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் இருந்து விலகிய குழந்தைகளின் எண்ணிக்கை 2 சதவிகிதத்திற்கும் குறைவு என அதிகாரப்பூர்வத் தரவுகள் நமக்குக் கிடைக்கின்றன. இதில் யாரைத் திருப்திபடுத்துவதற்காக, தமிழக கிராமங்களில் பள்ளிகள் இல்லை என்ற சித்தரிப்பைக் காட்டியிருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர்? பீஹாரில் தனி நபராக ஊரின் குளத்தைத் தூர்வாரிய முதியவர் குறித்த செய்தித்தாள் கட்டிங் இறுதியில் காட்டப்படுகிறது. இதனைத் தமிழ்நாட்டின் சூழலோடு ஒப்பிடுவதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன? இதற்கு இரண்டு பதில்கள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று, தமிழ்நாடு உத்தரப் பிரதேசம், பீகார் முதலான மாநிலங்களின் வரிசையில் இருக்கிறது என்பது; இரண்டாவது, இவ்வாறு காட்டுவதன் மூலம் பார்வையாளர்களின் பரிகாசத்தை உணர்வைப் பெற்று, படத்தை வெற்றிப் படமாக மாற்றுவது என்பது. இவற்றோடு இறுதியில், `உங்க மேல தான் தப்பு!’ என்று நகர்ப்புறத்தைச் சேர்ந்த பெண் மீட்பராகத் தோன்றி இந்த அப்பாவி மக்களைக் காக்கிறாராம்.

அமைச்சரின் ஆள்களால் காளைகள் காணாமல் போனதற்காக, பல நாள்களாக பிரேக்கிங் நியூஸில் இந்தச் செய்திகள் ஒளிபரப்பு ஆகின்றனவாம். லோக்கல் மீடியா தொடங்கி, நேஷனல் மீடியா வரை அங்கு ஆஜராகிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியினச் சிறுவனை அழைத்து, தனது செருப்பைக் கழட்ட சொன்னதும், அது சர்ச்சையான பிறகு அதற்கு அவர் கொடுத்த விளக்கமும், அதன்பிறகு ஊடகங்கள் அந்தச் செய்தியைக் கண்டுகொள்ளாமல் விட்டதும் இங்கு நடந்தது தானே? இதில் ஆடி காரில் இருந்து இறங்கி வரும் அய்யாகண்ணு போன்ற விவசாயி, சீமான், ஸ்டாலின் போன்ற அரசியல்வாதிகள் என சிரிப்புக்காக காட்டப்படும் அரசியல்வாதிகளின் சித்தரிப்பும் படுமோசம். இந்த அரசியல்வாதிகள் மீது விமர்சனம் இருக்கலாம். ஆனால் நிலவும் சமூக கட்டமைப்பின் சிக்கல்களைக் குறித்த எந்த ஆய்வும் இல்லாமல், அனைத்தையும் கண்டெண்டாக மாற்றும் மனநிலையில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இது உத்தரப் பிரதேசத்திலோ, பீகாரிலோ கதைக்களமாக காட்டப்பட்டிருந்தால் இதுகுறித்து இவ்வளவு பேசப் போவதில்லை. நிலவும் அரசுக் கட்டமைப்பின் எல்லைக்குள் நின்று, வடக்கிற்குத் தெற்கு, குறிப்பாகத் தமிழ்நாடு வழிகாட்டுவதாக, ஒன்றியத்திற்கு எதிராக அரசியலை முன்வைக்கும் போது, ராம ராஜ்யமும், ராவண ராஜ்யமும் ஒன்று என்று பேசுவதும், முதலாளித்துவத்தின் மூச்சுக் காற்றான விளம்பரத்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய இயக்குநரின் கண்களுக்கு முதலாளிகளோ, பெருநிறுவனங்களோ தென்படாததும் மிகப்பெரிய சிக்கல்.

இறுதிக்காட்சியில் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் மாடுகள், மாட்டுக்கறிக் கடையின் வாசலில் நாயகனுக்கு நிகழும் உணர்வுகள் என வட இந்தியப் பசு குண்டர்களின் தேவை, தென்னிந்தியாவிலும் இருப்பதுபோன்ற ஒரு லாஜிக்கையும் நமக்கு அளித்து விடுகிறார்கள்.

`இராமே ஆண்டாலும்.. இராவணன் ஆண்டாலும்’ வெளியான அதே நாளில், தமிழ்நாட்டின் கிராமங்கள் குறித்த இரண்டு செய்திகள் பேசுபொருளாகியுள்ளன. கண்ணகி – முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது. வேலூரில் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்துமதி என்ற இளம்பெண்ணுக்குத் தடையாக இருந்த அந்த ஊரின் உயர்சாதியினர் குறித்த செய்தியும் இதே நாளில் பேசப்பட்டிருக்கிறது. தமிழக கிராமங்களின் உண்மையான நிலை இப்படியிருக்க, கிராம மக்களை `ரொம்ப அப்பாவிகள்’ என்று சித்தரிப்பதன் மூலமாக, இந்த நகர்ப்புற இயக்குநர்கள் ஏன் கிராமங்களைத் தங்கள் கண்ணோட்டங்களில் இருந்து மட்டுமே பார்க்கிறார்கள்? நிலவுடைமையை ஒரு பக்கம் வெள்ளந்தித் தனமாகப் போற்றிக் கொண்டே, மறுபக்கம் முதலாளித்துவத்தை எதிர்ப்பதும், விவசாயத்தை உணர்வு ரீதியான பிரச்னையாக மாற்றுவதும் தமிழ் சினிமா உற்பத்தி செய்திருக்கும் புதிய சிக்கல். `இராமே ஆண்டாலும்.. இராவணன் ஆண்டாலும்’ அதில் ஒரு பகுதி.

கட்டுரையாளர் – ர. முகமது இல்யாஸ்.

ஊடகவியலாளர், தமிழின் முன்னனி பத்திரிகைகளில் எழுதி வரும் இவர் தற்போது ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்