காற்று மாசுபாடு அதிகமுள்ள இடங்களில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, இந்தியா முழுதும் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அதிக மாசுபாடுக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் மற்றும் தீவிர கொரோனா தொற்று ஆகியவற்றிக்கிடையே உள்ள தொடர்புகுறித்து,”மனிதர்களின் செயல்பாட்டால் ஏற்பட்டுள்ள உமிழ்வுகள் மற்றும் காற்றுத் தரத் தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் PM2.5 நுண் துகள்களிடையே உள்ள தொடர்பைக் கண்டறிதல்” என்ற தலைப்பின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை புவனேஸ்வர் உத்கல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சரோஜ் குமார் சாஹு மற்றும் பூனம் மங்கராஜ்; மூத்த விஞ்ஞானி குஃப்ரான் பீக் மற்றும் புனேவில் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் விஞ்ஞானி சுவர்ணா டிக்கிள்; ரூர்கேலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த பீஷ்மா தியாகி மற்றும் புவனேஸ்வரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த வி. வினோஜ் ஆகிய ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து மற்றும் தொழிற்சாலையிலிருந்து அதிகமாசுபாடுகள் ஏற்பட்டுள்ள மும்பை மற்றும் புனே பகுதியில் அதிகளவில் கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் நிகழ்ந்துள்ளதும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகுறித்து தெரிவித்துள்ள ஆய்வாளர் முனைவர் சாஹு,”எங்களது ஆய்வின் வழியாக மாவட்ட அளவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டுக்கும் கொரோனா தொடருக்கும் தொடர்பு உள்ளதைக் கண்டறிந்தோம். மேலும், அதிகளவில் பெட்ரோல், டீசல் போன்ற புகைபடிவ எரிபொருட்கள் பயன்படுத்தக்கூடிய தொழிற்சாலை மற்றும் போக்குவரத்து வாகனங்கள் போன்றவை வெளியிடக்கூடிய புகையால் கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தி குறிப்பிடுகிறது.
அதிகளவிலான புதைபடிவ எரிபொருட்கள் பயன்படுத்தக்கூடிய பகுதிகளான மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் நுண்துகள் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நிலையில், இப்பகுதிகளில் கொரோனா தொற்றும் அதிகமாக இருந்துள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
மேலும், இந்தியளவில் நுண்துகள் காற்று மாசுபாட்டில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளதாகவும், இரண்டாம் இடத்தில் மஹராஷ்டிர மாநிலம் உள்ளதாகவும் தேசிய உமிழ்வு பட்டியலின் வழியாக தெரியவந்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று, மோசமான காற்றுதர பட்டியலில் டெல்லி மற்றும் அகமதாபாத் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும், மும்பை மற்றும் புனே முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் உள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.