Aran Sei

அர்ச்சகர் நியமனத்தில் சமத்துவம் பேணப்படவேண்டும் – ஆகமக்கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க திருமாவளவன் வேண்டுகோள்

னைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம்  ஆட்சிப் பொறுப்பேற்ற நூறாவது நாளில் புரட்சிகர வரலற்றுச் சாதனை என்றும், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் நீக்கப்பட்டது என்றும்  தமிழ்நாடு முதலமைச்சருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிராமணரல்லாத பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேரை அர்ச்சகர்களாக நியமனம் செய்து அதற்கான ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியிருக்கிறார். அவர்களில் 6 பேர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்ற பகுத்தறிவு பகலவன் பெரியாரின் கனவு மெய்ப்பட்டு இன்று அவரது நெஞ்சில் தைத்த முள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் களையப் பட்டிருக்கிறது”. என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட எல்.இளையபெருமாள் கமிட்டி 1969 இல் சமர்ப்பித்த தனது அறிக்கையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், “1970ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் தலைமையிலான அரசு, இந்து அறநிலையத்துறை சட்டம் 1959 இல் திருத்தம் கொண்டு வந்தது. அதை எதிர்த்து சில சனாதனவாதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அர்ச்சகர் என்பவர் சமயத் தலைவருக்கு ஒப்பானவர் என்று அங்கு வாதிட்டனர். ஆனால் உச்ச நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. அவர் அறங்காவலர்களால் நியமிக்கப்படும் ஒரு ஊழியர் மட்டும் தான் என்று  தீர்ப்பளித்தாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆனாலும்,  “ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ள கோயில்களில் அந்த முறையின்படி தான் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் அது தெரிவித்தது. அதனால் ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ள பெரிய கோயில்களில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க முடியாத நிலை இருந்தது”. என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே போன்று, “கடந்த 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தை எதிர்த்துச் சனாதனிகள் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றார்கள். அதனால் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியெடுத்த 206 பேரைத் திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்க முடியாத நிலை உண்டானது”. என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதனிடையே 2015ஆம் ஆண்டு அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் அந்த முறைப்படி தான் அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும் என்று உறுதிசெய்தது என்றும்,  அந்த நியமனம் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 14 இல் உறுதி அளிக்கப்பட்டுள்ள சமத்துவம் என்ற கோட்பாட்டுக்கு முரணானதாக இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், “2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு-14 ஐக் குறிப்பிட்டு ‘அர்ச்சகர் நியமனத்தில் சமத்துவம் பேணப்பட வேண்டும்’ என்று தெளிவுபடுத்தி இருப்பதால், ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே அர்ச்சகர்களாக நியமித்தால் அது நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும்” என்றும் திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனவே, ஆகமக் கோயில்களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அர்ச்சகர் பயிற்சிப் பெற்ற மற்றவர்களையும் அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டுமெனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்