Aran Sei

அதிக தகுதி காரணம் – பட்டதாரியின் பியூன் வேலையை பிடுங்கிய உச்சநீதிமன்றம்

Image Credits: US News

‘அதிக தகுதி’ கொண்டவரை பணியில் நியமிக்க வேண்டாம் எனும் முடிவை ஒரு நிர்வாகம் எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், காலியிடம் இருக்கும்போது தகுதியான ஒருவரை நிராகரிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, நிறுவனங்களின் இத்தகைய முடிவுகளில் நீதித்துறை பெரிதாகத் தலையிட முடியாது என்று கூறியுள்ளது. ஒரு பதவிக்கான தகுதிகளை பரிந்துரைப்பது ‘ஆட்சேர்ப்புக் கொள்கை’ தொடர்புடைய ஒன்று என்றும் அது குறித்த முடிவுகளை சம்மந்தப்பட்ட நிர்வாகம் தான் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

நீதிபதி எம்.ஆர் ஷா, “பணியமர்த்துபவர் தான், அனைத்து பதவிகளுக்கான தகுதியையும் நிர்ணயிக்க முடியும். அதை பரிசளிப்பது நீதிமன்றத்தின் வேலை அல்ல” என்று தீர்ப்பளித்துள்ளார்.

ஒரு பதவிக்குத் தேவையான தகுதியைப் பரிந்துரைக்கப் பணியமர்த்துபவர்களுக்கு ‘அதீத சுதந்திரம்’ வழங்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

“இதற்கு ஒரு கரணம் உண்டு… நிறுவனங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு தான் தகுதிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. நீதிமன்றத்தால் அது குறித்து ஆலோசிக்கவோ முடிவெடுக்கவோ முடியாது” என்று உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

எவ்வாறாயினும், பதவிகளுக்கான தகுதிகளை பரிந்துரைப்பதில், பணியமர்த்தும் ஒருவர் தன்னிச்சையாகவோ அல்லது அதீத கற்பனைகளுடனோ செயல்பட முடியாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அதிக தகுதி’ கொண்ட ஒருவரை பியூன் பணியில் தொடர ஒரிசா உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அதை எதிர்த்துப் பஞ்சாப் நேஷனல் வங்கி தாக்கல் செய்த மேல்முறையீட்டின் பேரில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.

பியூன் பணியில் தொடர வேண்டும் என்று அதிக தகுதி வாய்ந்த அந்த நபர் கோரிக்கை வைத்துள்ளார். 2019-ம் ஆண்டு, நவம்பர் 22-ம் தேதி, ஒரிசா உயர் நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. தற்போது, அந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மனுதாரர், தான் ஒரு பட்டதாரி என்ற உண்மையை வேண்டுமென்றே வெளிப்படுத்தவில்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தாமதமாகத் தான் தெரியவந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பில் தெறிச்சி பெற்றவர்களுக்குப் பியூன் வேலை வழங்கப்படும். பஞ்சாப் நேஷனல் வங்கிக்குப் பட்டதாரிகளை பியூனாக நியமிக்கக் கூடாது எனும் விதிகள் உள்ளது என்றும் தி இந்து குறிப்பிட்டுள்ளது.

“தற்போதைய வழக்கில், 12-ம் வகுப்பு தேர்ச்சி எனும் தகுதியைப் பரிந்துரைத்திருப்பது நியாயமானது. 2008-ம் ஆண்டு, பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த முடிவுக்கு வந்துள்ளது. அன்று முதல் இது நடைமுறையில் உள்ளது. எனவே, ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புத் தவறு என்பது தெளிவாகியுள்ளது” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்