Aran Sei

தமிழ்நாட்டு வாடிக்கையாளரை இந்தியில் பேச நிர்பந்தித்த ஊழியர் – பணிநீக்கம் செய்த மன்னிப்பு கோரிய சோமோட்டோ நிர்வாகம்

தமிழ்நாட்டைச்  சேர்ந்த விகாஷ் என்பவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். அதில், நான் ஆர்டர் செய்த உணவு முழுமையாக இல்லாமல் இருந்தது. இதனால் இந்த விவகாரம் குறித்து சோமேட்டோ கஸ்டமர் கேரைத் தொடர்பு கொண்டபோது பணம் திரும்பக் கிடைக்காது. உங்களால் இந்தியில் பிரச்னையை விளக்கமுடியவில்லை. ஒரு இந்தியராக இருந்துகொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள விகாஷ், கஷ்டமர் கேர் உடனான ஸ்கிரீன்ஷாட்டையும் அத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சோமோட்டோ மன்னிப்புக் கோரி அந்த ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சோமோட்டோ நிர்வாகம்,  எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுப்பட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரைப் பணிநீக்கம் செய்துள்ளோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிரக் கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.

இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்தல் முயற்சிகளை உள்ளூர்மயமாக்கியுள்ளோம் (எ.கா. நாங்கள் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்), மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்ட்டர் / சர்வீஸ் சென்ட்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம்.

உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று சோமோட்டோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இப்பிரச்சினை குறித்துப் கருத்து தெரிவித்துள்ள தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கேள்வி ஒன்றை ட்விட்டரில் எழுப்பி உள்ளார். அதில்., எப்போதிலிருந்து ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியானது, தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர் ஏன் ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டும், எந்த அடிப்படையில் உங்கள் வாடிக்கையாளருக்குக் குறைந்தபட்சம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்குகிறீர்கள். உங்கள் நுகர்வோரின் பிரச்னையைத் தீர்த்துவையுங்கள். மன்னிப்பு கோருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்