Aran Sei

’எல்கர் பரிஷத்’ நிகழ்வை நடத்துவோம் : பி.ஜி.கோல்ஸே பாட்டில்

2017, டிசம்பரில் சர்ச்சைக்குள்ளான எல்கர் பரிஷத் நிகழ்ச்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியுமான பி.ஜி.கோல்ஸே பாட்டில்,வருகின்ற 31 ஆம் தேதி மீண்டும் எல்கர் பரிஷத் நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டு புனே காவல்துறையிடம் விண்ணப்படம் சமர்பித்துள்ளார்.

ஸ்வர்கதே காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தில், எல்கர் பரிஷத் நிகழ்வை புனேவின் கணேஷ் கலா க்ரிதா மஞ்ச் அரங்கத்தில் நடத்த அனுமதி கோரியுள்ளார் கோல்சே-பாட்டில்.

பீமா கோரேகான் வழக்கு – வரவர ராவ் உடல் நிலையில் முன்னேற்றம்

“பேச்சாளர்கள் உட்பட 700-800 பேர் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அரங்கத்தை ஏற்கனவே பதிவு செய்து விட்டோம். உள்ளூர் காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளோம். அவர்கள் அதை மேலதிகாரிகளுக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளார்கள்” என்றார் கோல்சே-பாட்டில்.

மாநில உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்க மறுத்தால், மும்பை உயர் நீதிமன்றத்திற்கும், இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்துக்கும் சென்று நிகழ்வு நடத்த அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யவிருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டிருக்கிறது.

எல்கர் பரிஷத் நிகழ்விற்கு அனுமதியளிப்பது குறித்து கருத்துத் தெரிவிக்காத மஹாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக், கொரொனா தொற்று முழு அடைப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்று கூறினார். கொரொனா காரணமாக மஹாராஷ்டிரா முழுக்கவே அனைத்து விழாக்களும் கொண்டாட்டங்களுக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.

பீமா கோரேகான் வழக்கு – பார்வை குறைபாடுள்ள நவ்லாகாவுக்கு கண்ணாடி தர மறுப்பு

” முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான பி.ஜி.கோல்சே-பாட்டிலுக்குச்  சட்டம் தெரியும். பேச்சு சுதந்திரத்திற்கும், நிகழ்வை நடத்துவதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை; ஆனால், ஊரடங்கு தளர்வுக்கு  (unlock) வந்திருந்தாலும், நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அரசியல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசனை செய்த பிறகு, அனுமதியளிப்பதா வேண்டாமா என முடிவெடுக்கப்படும்” என்று மாலிக் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே, விநாயக சதுர்த்தியாக இருந்தாலும், அம்பேத்கர் ஜெயந்தியாக இருந்தாலும் மஹாராஷ்டிரா மாநில மக்கள் அனைத்து முழு அடைப்பு விதிமுறைகளையும் பின்பற்றிவருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் இடஒதுக்கீடு – நடப்பது என்ன?

கோல்சே-பாட்டிலின் நிகழ்விற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஷாம்புராஜ் தேசாய், பெருந்தொற்று சமயத்தில் எந்த விழாக்களையும் நடத்துவது சுகாதாரத்திற்கு நல்லதல்ல என்றார். “எல்லாருமே மாநில அரசு விதித்திருக்கும் கொரொனா விதிமுறைகள் பின்பற்றியாக வேண்டும். நிகழ்ச்சிக்கு அனுமதி உள்ளதா இல்லையா என்பது குறித்து சரியான நேரத்தில் மாநில அரசு முடிவெடுக்கும்” என்று தேசாய் கூறினார்.

2017 ஆம் ஆண்டு புனேவின் சனிவார்வாடாவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் நிகழ்வில் மஹாராஷ்டிராவில் உள்ள அம்பேத்கரிய குழுக்கள், இடதுசாரி குழுக்கள் உட்பட 250-ற்கும் மேற்பட்ட முற்போக்கு அமைப்புகளும், குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, பரிபா பகுஜன் மஹாசங்கத்தின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் தலைவர் உமர் காலித் போன்ற ஆளுமைகளும் பங்கேற்றனர்.

யார் இவர்கள்? எதற்கு சிறையில் உள்ளார்கள்? என்ன குற்றம் செய்தார்கள்?

இந்த நிகழ்விற்கு மறுநாள், 2018 ஜனவர் 1 ஆம் தேதி அன்று வெடித்த பீமா- கோரேகாவுன் கலவரத்திற்கு எல்கர்-பரிஷத் நிகழ்வு தான் காரணம் என புனே காவல்துறை, அதன்  விசாரணையில் தெரிவித்தது சர்ச்சையானது.  ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி.பி.சாவந்த் மற்றும் கோல்சே-பாட்டில் ஆகியோரும் பிற செயற்பாட்டாளர்களும் ,காவல்துறை முன் வைத்த இந்த தேற்றத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

(தி இந்துவில் வெளியான செய்தியின் மொழியாக்கம்)

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்