Aran Sei

அசாம் போடோலாந்த் தலைவரை மிரட்டிய பாஜக தலைவர் : பரப்புரைக்கு 48 மனி நேரம் தடை விதித்த தேர்தல் ஆணையம்

சாம் மாநிலத்தில் உள்ள போடோலாந்த் மக்கள் முன்னணி தலைவர் ஹக்ரமா மொஹிலாரி மீது அச்சுறுத்தும் வகையிலான கருத்துக்களை கூறியதாக குற்றம் சாட்டி, அம்மாநில அமைச்சரும், பாஜக தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு பரப்புரை செய்ய 48 மணி நேரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் சுயாட்சி பகுதியாக இயங்கி வரும் போடோலாந்தை தாய் நிலமாக கொண்டு வாழும் போடோ இன மக்கள், தங்களுக்கு உரிய உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி, தனி மாநிலக் கோரிக்கையை தொடர்ந்து முன் வைத்து போராடி வருகிறார்.

போடோ ஒப்பந்தத்தின் படி, மத்திய அரசின் அரசாணைகளோ, அசாம் மாநிலத்தின் அரசாணைகளோ, போடோலாந்த் நிர்வாக குழுவின் ஒப்புதலுக்கு பிறகே அங்கு நடைமுறைப்படுத்தப்படும்.

‘குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி அசாம் மக்களிடம் பேச பாஜகவிற்கு தைரியம் இல்லை’ – பிரியங்கா காந்தி விமர்சனம்

இந்நிலையில், போடோலாந்த் போராட்டக் குழுத் தலைவர் எம்.பாதாவுடன் இணைந்து, தீவிரவாதத்தை முன்னெடுத்தால், போடோலாந்த் மக்கள் முன்னணி தலைவர் ஹக்ரமா மொஹிலாரி தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) மூலம் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று பாஜக தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மிரட்டியதாக அசாம் மாநில காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்திருந்தது.

இதையொட்டி, நேற்று (ஏப்ரல் 2) அறிக்கை வெளியிட்டுள்ள அசாம் மாநில தேர்தல் ஆணையம், “ஹக்ரமா மொஹிலாரி எம்.பாதாவுடன் இணைந்து தீவிரவாதம் செய்தால் அவர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். நான் நேரடியாக பேசுகிறேன். ஹக்ரமா எம்.பாதாவை தொடர்ந்து ஊக்குவித்தால் அவர் கண்டிப்பாக சிறைக்குச் செல்வார். அதற்காக ஏராளமான சான்றுகள் எஙகளிடம் கிடைத்துள்ளன. இவ்வழக்கு தேசிய விசாரணை முகமைக்கு மாற்றப்படும்…” என்று பாஜக தலைவரான ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியுள்ளதை குறிப்பிடப்பட்டு, தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

‘அசாமின் வளங்களை விற்று, நம்மை டெல்லியின் காலடியில் தள்ளிய பாஜகவை தோற்கடியுங்கள்’ – சிறையிலிருந்து அழைப்புவிடுத்த அகில் கோகோய்

மேலும், “ஏப்ரல் 02 ஆம் தேதி தொடங்கி அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் தொடர்பாக எந்தவொரு பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், சாலை நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் மற்றும் ஊடகங்களில் (மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்கள்) பேசுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்கிறது.” என்று அவ்வறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோல்பரா மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரான ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் சகோதரர் சுஷாந்த் பிஸ்வா சர்மாவை பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

போடோலாந்த் மக்கள் முன்னணி அசாமில் காங்கிரஸின்  கூட்டணி கட்சியாக இருக்கிறது. இதற்கு முன் பாஜக கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்