80 வயதுக்கு மேற்பட்டோரிடம் வீட்டுக்குச் சென்று தபால் வாக்கைப் பெறும் முறை, ஜனநாயகத்தின் உயிர்நாடியான ரகசிய வாக்களிப்பைச் சவக்குழியில் தள்ளும் அபாயச் செயல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம், இடது சாரிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. தபால் வாக்குகளில் குளறுபடி நடந்துள்ளதாகவும் கூறின.
பீகார் தேர்தல்: ‘வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு’ – இடதுசாரிகள் புகார்
இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு இருக்கும் நிலையில், பீகாரில் நடத்தப்பட்ட அதே தேர்தல் வழிமுறைகளை நாடு முழுதும் பின்பற்றக்கோரி இந்தியத் தலைமை ஆணையம், மாநில தேர்தல் அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடைமுறைக்கு எதிராக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் “தகுதியும் உரிமையும் கொண்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் வாக்காளர்கள், வாக்குச்சாவடிகளில் உள்ள வெளிப்படையான வாக்குப்பதிவு முறையைச் சீர்குலைக்கும் வகையில், ‘கடந்த அக்டோபர் மாதமன்று அறிவிக்கப்பட்ட பீகார் மாடல் தேர்தல் நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையைப் பார்த்து, சுதந்திரமான நேர்மையான தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருப்போர் பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.” என்று அவர் தெரிவித்தார்.
பீகார் தேர்தல் – ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
பூத் லெவல் அதிகாரி வீட்டிற்குச் சென்று தபால் வாக்குச் சீட்டைக் கொடுப்பார். வாக்குகள் பதியப் பெற்ற வாக்குச்சீட்டைத் திரும்பி வாங்கி வந்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார். இதுதான் பீகாரில் நடைபெற்ற வழிமுறை. இது தேர்தலின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துகிறது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
80 வயதுக்கு மேற்பட்டோரிடம் வீட்டுக்குச் சென்று தபால் வாக்கை பெறும் முறை, ஜனநாயகத்தின் உயிர்நாடியான ரகசிய வாக்களிப்பை சவக்குழியில் தள்ளும் அபாயச் செயல்!
இதுதான் பாஜக கூட்டணிக்கு உதவிய 'பீகார் மாடல்'!
அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசிக்கப்படாத இந்த அறிவிப்பை @ECISVEEP திரும்பப் பெறுக! pic.twitter.com/KcnCfQTZXo
— M.K.Stalin (@mkstalin) November 21, 2020
”வாக்காளர்களின் வயது உரிய முறையில் சரிபார்க்கப்படுவதில்லை; மாற்றுத்திறனாளி என்று வகைப்படத்தலுக்கு எந்த விதிமுறையும் வகுக்கப்படவில்லை. ‘தபால் வாக்களிப்பு முறைக்கு’ தகுதி படைத்தவர்கள் என்ற பட்டியலும் முன்கூட்டியே அறிவிக்கப்படாது. இப்படியொரு குளறுபடிதான் நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது,” என்று அவர் கூறியுள்ளார்.
பீகார் அமைச்சரவை – பாதிக்கும் மேற்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவை
நேரடியாகத் தபால் வாக்குச் சீட்டுகளைக்கொண்டு போய்க் கொடுத்து, வாக்குகள் பதிந்து பெறுவது என்பது ரகசியமான சுதந்திரமான வாக்கெடுப்பு முறையையும் ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கிவிடும். ஆளுங்கட்சிக்கும் – எதிர்க்கட்சிக்கும் இடையில் ஒரு சமமான நேர்மையான தேர்தல் களத்தை உருவாக்காது. எனவே இந்தத் தேர்தல் முறை நடைமுறைக்கு வரக் கூடாது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நடுநிலைமையுடன் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணை போகும் பாரபட்சமான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விவாதித்து ஆரோக்கியமான தேர்தல் ஜனநாயகத்தை எண்ணத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.