Aran Sei

தேர்தல் நடக்கும் மாநிலங்கள் – ‘ புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான காலம் குறைப்பு’ – தேர்தல் ஆணையம்

கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட தாமதங்களின் காரணமாக, தேர்தல் ஆணையத்தில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான காலம் முப்பது நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் மார்ச் 19-ம் தேதி வரையும் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 7-ம் தேதி வரையும் 7 நாட்கள் தளர்வு திட்டம் அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள நடைமுறையின் படி, புதிய கட்சியை பதிவு செய்ய கட்சியின் பெயர், மாநிலம், கட்சியின் நோக்கம், உறுப்பினர்கள், பிரிவுகள், நிர்வாகிகள் தேர்வு நடைமுறை உள்ளிட்ட முழுமையான விவரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதுடன் ரூ.10,000-க்கான வரைவோலையை கட்டணமாக செலுத்த வேண்டும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : ‘ஏப்ரல் 6 வாக்குபதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை – அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்’

மேலும், புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை இரண்டு தேசிய நாளிதழ்களிலும் இரண்டு உள்ளூர் நாளிதழ்களிலும் விளம்பரம் செய்ய வேண்டும். அந்த புதிய கட்சி தொடர்பான ஆட்சேபங்களை 30 நாட்களுக்குள் யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். அதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இதில் இறுதி முடிவை எடுக்கும்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 2) தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், “மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்களை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 26-ம் தேதி அறிவித்தது. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால் பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளதாக  தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அச்செய்தியில், “பிப்ரவரி 26-ம் தேதி அல்லது அதற்கு முன்னர், பதிவு செய்யவுள்ள தங்கள் கட்சியின் அறிவிப்பை வெளியிட்ட கட்சிகளுக்கு ஏழு நாள் கால அவகாசம் வழங்கப்படும். ஏழு நாட்களோ அல்லது முன்னர் வழங்கப்பட்ட 30 நாட்களோ, எது முதலில் வருகிறதோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன் மீதான ஆட்சேபணைகள் அன்று மாலை 5.30 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும்.”  என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்