Aran Sei

தேர்தலும் சாதியும் – உ.பி.யில் வெல்லுமா பாஜகவின் தந்திரம்

சோனம் மிகவும் உடல் மெலிந்து, வெளிறி போய்விட்டாள். அந்த 15 வயது சிறுமியின்  கண்களில் விரக்தி நிரம்பி நிற்கிறது‌.  தற்போது வீட்டு வேலை செய்யும் பெண்ணாக இருக்கிறார். தனது வண்டி இழுக்கும் தந்தை கொரோனா இரண்டாவது அலையில் உமிரிழந்ததால் இதைத்தவிர அவருக்கு அவருக்கு வேறு வழியில்லை. தனது  தாயை  நீண்ட காலத்திற்கு முன்பே இழந்து விட்ட நிலையில்  தன் தந்தையையும் இழந்து விட்ட அவளுக்குத் தனது இரண்டு தங்கைகளையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு வந்து விட்டது.

தந்தை ஓம் வீர் ரத்தோர் இருந்த வரை சோனத்திற்கும் அவளுடைய தங்கைகளான சுவாதி மற்றும் வைஷ்ணவி ஆகியோருக்கும் வாழ்க்கை எளிதாகத் தான் இருந்தது. ஒவ்வொரு நாள்  மாலையிலும் வேலையை முடித்து விட்டு திரும்பியதும் அவர்களோடு அவர் விளையாடுவார். அவர்களுக்கு கதைகள் கூறுவார். பகலில் ரத்தோர் வேலைக்குச் செல்லும் போது மூன்று பெண்களும் உள்ளூர் பள்ளிக்குச் சென்று வந்தார்கள். மேற்கு உத்திரபிரதேசத்தில் இந்த நகரத்திற்கு நத்னகிரி என்றும் இந்த பெயர் வருவதற்கான காரணமாக உள்ள பரேய்லியைச் சுற்றியுள்ள சிவனின் ஏழு முக்கிய கோவில்களில் ஒன்றான பர்கண்டிநாத் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய வீட்டில் அந்த குடும்பம் வாழ்ந்து வந்தது. தங்கள் தாயை இழந்ததைக் கூட அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை என்று கூறும் ரத்தோர், அவரே தாயாகவும் தந்தையாகவும் இருந்து அவர்களை காப்பாற்றி வந்தார்.

“நான் டெலி சாதியைச் சேர்ந்தவள்,” என்று கூறும் சோனம்,” எங்கள் தந்தை எங்களுக்கு கிராமியக் கதைகளைக் கூறுவார். ஒரு முறை எங்களிடம் பிரதமர் மோடி நம் சாதியின் ராஜாவாக முடிசூட்டப்பட்டவர் என்று கூறினார்,” என்று தெரிவிக்கிறார். தாக்கூர்களும் அல்லது ரஜபுத்திரர்களும் பெரும்பாலும் “ரத்தோர்” என்ற குடும்பப் பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள். சோனத்துடன் நான் நடத்திய உரையாடல், உ.பி. மற்றும் பீகார்  மாநிலங்களில் உள்ள டெலி அல்லது டெல்கார் சாதிக்கு சமமான குஜராத் மற்றும் மகாராட்டிரத்தில் உள்ள கான்சி-மோத் சாதியைச் சேர்ந்த நரேந்திர மோடி எவ்வாறு இந்தி பேசும் முக்கிய மாநிலத்தில் உள்ள  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மக்களின் கிராமிய கதைகளில் நுழைந்தார் என்பதில் முக்கிய கவனத்தைச் செலுத்த வைத்தது.  மோடி 2014 லிருந்தே உ.பி. மற்றும் பீகாரில் தேர்தல்களில் தனது பிற பிற்படுத்தப்பட்ட வகுபினர் என்ற அடையாளத்தை குறிப்பிட்டு அடிக்கடி ஏன் கூறி வந்தார் என்பதை சோனத்தின் தந்தை மோடியை டெலி சாதியினரின் ராஜா என்று கூறியது விளக்குகிறது.

இருப்பினும், ரத்தோர் இறந்த போது, சோனத்தையும் அவளது சகோதரிகளையும் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. குறைந்தது தனது தந்தைக் கூறிய நாட்டுப்புறக் கதைகளில் வரும் ‘பர்கண்டி நாத் பாபாவோ’  அல்லது ” ராஜாவாக முடிசூட்டப்பட்டவரோ”  கூட வரவில்லை.  இதற்கு மாறாக,  ஆளும் பாஜக அரசின் ஆதரவுடன் இயங்குவதாகத் தோன்றும், உள்ளூர் அதிகாரிகளுடன்  நெருக்கமாக கைகோர்த்து செயல்படும் நில மோசடி  கும்பல்கள், அந்த மூன்று பெண்களும் பிறந்து, அவர்களின் தந்தையுடன் வாழ்ந்து வந்த அந்த வீட்டையும் எடுத்துக் கொண்டு அவர்களை துரத்தி விட்டனர்.

நல்வாய்ப்பாக, சோனத்தையும் அவளுடைய சகோதரிகளையும், அதே சாதியைச் சேர்ந்த பரந்த இதயம் கொண்ட, அருகில் உள்ள  பவான் விகார் காலனியில் வீட்டு வேலை செய்யும் 30 வயதான சுனிதா என்பவர் காப்பாற்றி வருகிறார். அவரது கணவர் பிரதீப் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். மூவரையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற சுனிதா, காப்பாற்றி வளர்க்கத் தங்களுக்குச் சொந்தக்  குழந்தைகள் இருந்த போதும், தன்னைப் போலவே சோனத்திற்கு ஒரு வீட்டில் வேலை வாங்கிக் கொடுத்து, மற்ற இரு பெண்களுக்கும் தன்னைத் தானே காப்பாளராக நியமித்துக் கொண்டார்.

சமூகவியல் ரீதியான கண்ணோட்டம்

இடைக்கால இந்தியாவில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்,உ.பி., பீகாரைச் சேர்ந்த டெலி சாதியினரும், குஜராத், மகாராட்டிரத்தைச் சேர்ந்த கான்சி- மோத் சாதியினரும் விவசாயிகளாக இருந்தனர். அவர்கள் எண்ணெய் எடுப்பவர்களாகவும்,  கோவில்களுக்கும், தீபாவளி போன்ற கலாச்சார விழாக்காலங்களில்  வீடுகளுக்கும்  விளக்குகளுக்கு ஊற்றும் எண்ணெய் தயாரித்து விற்றுப் பிழைத்து வந்தனர்.  இது அவர்களை கிராமப்புற வாழ்வில் சமூக- கலாச்சாரத்தின் முக்கிய கூராக வைத்திருந்தது. ஆனால் அவர்கள் இந்து வர்ணாசிரம தர்மத்தின் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளில் கடைசி பிரிவில் வைக்கப் பட்டிருந்தனர். மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களும், சத்திரியர்களும், வைசியர்களும் சடங்குகளையும், அதிகாரத்தையும், வளத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சூத்திரர்கள் அந்த மூன்று மேல்தட்டு வர்க்கத்தினருக்கும் பணிவிடை செய்யும் நிலையில் வைக்கப்பட்டனர்.

புகழ்பெற்ற சமூகவியல் பேராசிரியரான எம்.என். சீனிவாஸ் தனது “சாதி: 20 ம் நூற்றாண்டின் அவதார்” என்று நூலில், “20 ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில், இந்தியச் சமுதாயத்தில் மேல் நோக்கிய நகர்வு முக்கிய நிகழ்வாகியது. கீழ்சாதி பிரிவினர் சமூக- பொருளாதார ஏணியில் உயர்சாதியினரின் பெயர் மற்றும் பழக்கவழக்கங்களை மேற்கொண்டு  மேலே செல்ல முயன்றனர். பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரைப் போலவே டெலி சாதியினரும்  வர்ணாசிரம வரிசை முறையில் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள, வெவ்வேறு மக்கள்தொகை கணக்கெடுப்புகளில் வெவ்வேறு குடும்பப் பெயர்களைக் குறிப்பிட்டனர். 1911 ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது டெலி சாதியினர் ரத்தோர் என்ற குடும்பப்பெயரை வைத்துக் கொண்டு தங்களை ரத்தோர் டெலி என்றும் 1931 கணக்கெடுப்பின் போது, தங்களை ரத்தோர் வைசியர்கள் என்றும் அழைத்துக் கொண்டனர்.” என்று எழுதி உள்ளார்.

இந்தி பேசும் மாநிலங்களில் பல சூத்திர சாதியினரை உயர்த்துவதில் ஆரிய சமாஜம் இயக்கமும் ஒரு பங்கை வகித்துள்ளது. இதற்கிடையில், நிகழ்வுகளின் சாட்சியங்கள் குஜராத் மற்றும் மகாராட்டிரத்தின் சில பகுதிகளிலிருந்த கான்சி- மோத் சாதியினர் உ.பி., மற்றும் பீகாரில் இருந்து டெலி, கம்மார்கள்(குயவர்கள்), துர்ஹாக்கள்( உள்ளூர் பழம் மற்றும் வேர்களை விற்பவர்கள்)  ஆகியோரைவிட மிக முன்னதாக, தொழில் மற்றும் செல்வத்தில் வளர்ந்து, தங்களை வைசியர் என்ற நிலைக்கு உயர்த்திக் கொண்டனர். சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், ராம் மனோகர் லோகியா கண்ணுற்றது போல, இந்த சமூக உலைக்கு தீமூட்டி, டெலி, கம்மார், துர்ஹா, நோனியா, அகிர்(யாதவர்கள்) கோண்டுகள், பன்சாரி, ராஜ்பர் இன்னும் இது போன்ற நூற்றுக்கணக்கான சாதியினரை அணிதிரட்டியது. உண்மையில், லோகியா மற்றும் அவரது சகாவான ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோர் முன்னெடுத்த சோசலிச இயக்கம்தான், அவர்களுக்குப் பின் அவரது ஆதரவாளர்களான பீகாரின் கற்பூரி தாக்கூர், உ.பி.யில் முலாயம் சிங் ஆகியோரால் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட்ட இயக்கம்தான் மண்டல் குழு அமைவதற்கு அடிப்படையாக இருந்தது.

மோடியும் மண்டல் குழுவும்

பீகாரைச் சேர்ந்த சோசலிசவாதியான பி‌.பி. மண்டல் அவர்களின் தலைமையிலான மண்டல் குழு, கிராமப்புற பனியாக்களின் துணை சாதியான டெலி மற்றும் பிற பனியாக்களான குயவர்கள், அகிர்கள், குர்மிகள் போன்ற பல சாதியினரைப் பட்டியலிட்டு, ஏற்கனவே உயர்மட்டத்தில் இருக்கும் சாதியினருக்கு சமமாக அவர்களை கொண்டு வர அவர்களுக்கு அரசு பணிகளில் ஒதுக்கீட்டை வழங்கினார். அந்தக் குழு குஜராத்தைச்  சேர்ந்த கான்சிகள் மற்றும் பட்டேல் சாதியினரையும், அரியானா மற்றும் மேற்கு உ.பி.யின் ஜாட் இனத்தவரையும் அவர்கள் ஏற்கனவே சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறி இருப்பதால், அவர்களை இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கி விட்டார்.

ஆனால் 1991 ல் மண்டல் குழு அறிக்கை அமலாக்கப்பட்ட போது சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக, கல்வி ரீதியாக முன்னேறி, இந்தப் பட்டியலில் இடம் பெறாத பல சாதியினர் தங்கள் அரசியல் செல்வாக்கை விரிவாக்கிக் கொள்ள பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களைச் சேர்க்க வேண்டும் என்று உரக்கக் குரலெழுப்பினர். இந்த சாதித் தலைவர்களின் பிரிவைச் சேர்ந்த நரேந்திர மோடி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, இந்தி பேசும் மாநிலங்களில் தன்னை டெலி மற்றும் அதற்கு சமமான சாதியினருடன்  அடையாளப்படுத்திக் கொள்ள தன்னை சூத்திரராகத்  தாழ்த்திக் கொண்டார். 2014 ல் காங்கிரஸ் மோடியை “போலி ஓபிசி” என குற்றம் சாட்டிய போது, 1994, ஜூலை 25 ம் தேதிய குஜராத் அரசின் அறிவிக்கையின் படி கான்சி சாதி பிற பிற்படுத்தப்பட்டோர் சாதியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக பாஜக விளக்கம் அளித்தது. எனினும், மோடியின் கான்சி சாதி உண்மையான மண்டல் குழு பயனாளிகள் பட்டியலில் இல்லை என்பது தெளிவு.

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

சோசலிச இயக்கத்தில் வேரூன்றி இருந்த உ.பி.யைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி, பீகாரின் ராஷ்டிரிய ஜனதா கட்சி, ஒன்றுபட்ட ஜனதா கட்சி, ஆகியவை  ஒன்றிய அரசிடம் 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்திய மக்கள் அனைவருடைய சாதியும் வெளிப்படுத்த வேண்டும் என மீண்டும் மீண்டும் கோரி வந்தன.

தற்போது நடந்து முடிந்த  நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரிலும் அந்தக் கட்சிகள் இந்தப் பிரச்சனையை எழுப்பினர். இதற்குப் பின்னால் உள்ள முக்கிய கருத்து, இட ஒதுக்கீட்டின் உண்மையான பயனாளிகளின் பங்கை கையாடல் செய்த சாதிகளை அம்பலப்படுத்துவதுடன், இட ஒதுக்கீட்டிற்கு உரிய உண்மையான “கீழ்த்தட்டு” சாதியினருக்கு அதன் பலன் கிடைப்பதை உறுதி செய்வதும் ஆகும். மேற்கூறப்பட்ட கட்சிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பின் உண்மையான தரவுகளின் அடிப்படையில்  ஒரு நீண்ட கால இயக்கத்தைத் துவங்க திட்டமிட்டுள்ளன.

சோனம் மற்றும் பிரதீப்

2016 ம் ஆண்டின் பணமதிப்பிழப்பு அறிவிப்பும், 2017 ம் ஆண்டில்  திட்டமிடப்படாமல்  ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்தியதும் ஏற்படுத்திய பொருளாதார சீர்குலைவை, 2020-21 ம் ஆண்டுகளில் வந்த கொரோனா நோய்த் தொற்று தொடரச் செய்தது. இந்த மூன்று நிகழ்வுகளும் ஒன்றாகச் சேர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவு எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தையும், வேலையிழப்பையும், வேலை வாய்ப்புக் குறைப்பையும் ஏற்படுத்தி நாட்டின் ஏழைகளை மிகக் கடுமையாகத் தாக்கியது.  தாராளவாத காலகட்டத்தில் சமையல் எண்ணெய், காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைக் பொருட்கள் ஆகியவற்றில் கூட்டாண்மை நிறுவனங்களின் ஊடுருவல், டெலி, கம்மார், துர்ஹா, மற்றும்  பழங்கள், காய்கறிகள், தின்பண்டங்கள் விற்பனை செய்யும் உள்ளூர் பனியாக்கள் ஆகியோரின் வாழ்க்கையை மேலும் மோசமாக்கியது. இது பெரும் நிறுவனங்களின் வளர்ச்சியின் மீதான மக்களின் கோபத்தில் எதிரொளித்தது.

ஓம்வீர் தனது குழந்தைகளுக்கு கூறிய நாட்டுப்புறக் கதையில் நரேந்திர மோடியை ‘டெலிக்களின் ராஜாவாக முடிசூடப்பட்டவர்’ என்கிறார். ஆனால் சோனத்தின் தத்தெடுக்கப்பட்ட சகோதரரான ஆட்டோ ஓட்டுநர் பிரதீப், “மோடி எங்கள் சாதியின் பெயருக்கு ஒரு களங்கம்‌. பெட்ரோல் மற்றும் டீசல் விலை நூறு ரூபாயைத் தொட்டுவிட்டது. பயணிகள் கட்டணத்தை உயர்த்த அனுமதிப்பதில்லை. இந்த விலையேற்றம் எங்கள் முதுகை ஒடித்து விட்டது. யோகி, மோடியின் இணைப்பு. இந்த முறை யோகி தோற்றுப் போய் விடுவார்,”  என்கிறார்.

நான் அவருடைய ஆட்டோவில் ஏறி துணைக்கோள் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல் பற்றிக் கேட்டேன். நாங்கள் பேருந்து நிலையத்தை அடைந்த போது பல ஆட்டோ ஓட்டுநர்களும்  பிரதீப் எங்களது உரையாடலில் கூறியதையே கூறினர்.

அவர்கள் எல்லா பாஜக தலைவர்களையும் எதிர்க்கிறார்கள் என்று கூற முடியாது. பிரதீப்பும் மற்றும் பல ஆட்டோ ஓட்டுநர்களும் பரேய்லி மேயரான பாஜகவைச் சேர்ந்த உமேஷ் கவுதமை பாராட்டுகின்றனர். அவர் கோவிட் 19 ஆல் பாதிக்கப்படும் மிக ஏழை  நோயாளிகளை கவனித்துக் கொள்ள ஒரு உதவி மருத்துவமனையை நடத்தி வருகிறார். “மேயர் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி மடுக்கிறார். மேலும் எங்களுக்கு உதவியும் செய்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் சிங் கஙகாவர் மற்றும் பிற பாஜக தலைவர்கள் அனைவரும்  பயனற்றவர்கள்,” என்கிறார் ஆட்டோ ஓட்டுநர் ரகுபர்.

அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கொரோனா இரண்டாவது அலை சமயத்தில் உமேஷ் கவுதம் உணவு, மருந்து போன்றவற்றை  கொடுத்தது மட்டுமின்றி, அவர் எவ்வாறு  நகரில் அனுமதிக்கப்பட்ட சாலை மற்றும், கட்டிடப் பணிகள் நடப்பதையும் உறுதி செய்தார் என்பதைப் பற்றி பேசினர்.

பரேய்லி புறநகரில் உள்ள‌ நாகாட்டியாவில், சில இளைஞர்கள் மூத்த ஊடகவியலாளர் அஜித் அஞ்சும் மொராதாபாத்தில் விவசாயிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் காணொளியைப்பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டோம். அஞ்சும் நேர்காணல் செய்த விவசாயிகள் தங்கள் துயரக் கதைகளைக் கூறி மோடி மற்றும் யோகிக்கு எதிராக இருப்பதைக் கூறினர்.

இந்த முறை யோகி போய் விடுவார். அடுத்த முறை மோடியும் போய் விடுவார்,”  என்கிறார் ஒரு இளைஞர்.

 

www.thewire.in இணைய தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்.

எழுதியவர்: நளின் வர்மா

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்