Aran Sei

கல்விக் கடன் செலுத்தாதவர்கள் படத்தை பேனர் போட்டு இழிவுபடுத்துவதா?- வங்கி நிர்வாகத்துக்கு வேல்முருகன் கண்டனம்

 கல்விக் கடன், விவசாயக் கடன் செலுத்தாதவர்களின் புகைப்படத்தை வங்கியின் முன்பாக பேனராக வைத்து இழிவுபடுத்துவதைப் போன்று கடனைத் திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட்டுகளின் படங்களை வங்கி நிர்வாகம் வைக்குமா என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரக்கோணம் எஸ்.பி.ஐ வங்கியில் கல்விக் கடன், விவசாயக் கடன் செலுத்தாதவர்களின் புகைப்படம் பெரிதாகப் போடப்பட்டு பேனர் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும் அதில், ’நீங்களும் இடம் பெற வேண்டுமா’ என்று வாசகம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

‘தமிழ்வழி கல்வி பெற்றவர்களுக்கான இடஒதுக்கீடு நிறுத்தம்’ – வேல்முருகன் குற்றச்சாட்டு

வங்கிகள் கடன் கட்டாதவர்களை இனம் கண்டு கடுமையாக நடவடிக்கை எடுக்கலாம் இல்லையென்றால் கல்விக் கடனைக் கட்ட முடியாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவி மேற்கொள்ளலாம், மேலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதன் மூலம் வேலை பெறுபவரின் ஊதியத்தில் கடன் தொகையைப் பிடித்தம் செய்து கொள்ளலாம் என்றும் யோசனைத் கூறியுள்ளார்.

வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் கடன் பெற்றுவிட்டு, அக்கடனைச் செலுத்தாமல், மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட சில கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் வெளிநாடு தப்பிச் சென்று, அங்கு சொகுசு வாழ்க்கை நடத்தி வருகின்றனர் என்றும் அவர்கள் மீது இதுவரை மத்திய அரசாலும், வங்கி நிர்வாகத்தாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் வேல்முருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

`கல்லூரிக் கட்டணத்தைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் – தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு

மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்க பல்வேறு விதிமுறைகளை விதிக்கும் வங்கி நிர்வாகம், கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு எந்தக் கேள்வியுமற்று தருகிறதென்றும், கடன் திருப்பிச் செலுத்தப்படாததால் மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வைத்ததுபோல் பெரு முதலாளிகளான மல்லையா, நிரவ் மோடியின் புகைப்படத்தை, பேனராக வங்கி வைக்குமா என்றும் அவர் கேள்வி  எழுப்பியுள்ளார்.

தமிழர்கள் தாக்கப்பட்டால் இந்திய இறையாண்மை பாதிக்கும் – வேல்முருகன்

கல்விக் கடன், விவசாயக் கடன் பெற்றவர்களின் புகைப்படத்தை வங்கியின் முன்பாக வைத்து இழிவுபடுத்துவதை விட்டுவிட்டு, மாணவர்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகளிடமும் மாணவர்களிடமும் கடனை வசூலிக்கத் தேவையான கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும்  தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்