Aran Sei

‘பெகசிஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு வேண்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாசிரியர்கள் சங்கம் மனு

பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரமானது பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது என்றும் இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்க வேண்டும் என்றும் இந்தியப் பத்திரிகையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, நேற்று (ஆகஸ்ட் 3), இந்தியப் பத்திரிகையாசிரியர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்படும் உளவுமென்பொருளை, பத்திரிகையாளர்களுக்கு எதிராக பயன்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அம்மனுவில், “பத்திரிகை சுதந்திரம் என்பதுஅரசின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும் என்று செய்யப்படும் புலனாய்வானது மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும். அது தொடர்பான பேட்டிகள் உள்ளிட்ட அனைத்து தரவுகளும் பாதுகாக்கப்பட வேண்டியவை. இதன் வழியாக, அதிகார துஷ்பிரயோகம், ஊழல், அரசுகளின் செயல்படாதன்மை போன்றவற்றை வெளிக்கொண்டுவர முடியும்.” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

ஆனால், பெகசிஸ் ஒட்டுக் கேட்பு விவகாரமானது இவை அனைத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது என்றும் ஆகவே இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்க வேண்டும் என்றும் இந்தியப் பத்திரிகையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜூலை 21 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த இந்தியப் பத்திரிகையாசிரியர்கள் சங்கம், “பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் கண்காணிக்கப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்திருந்தது.

பெகசிஸ் ஸ்பைவேர்: ‘உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும்’ – மூத்தப் பத்திரிகையாளர் என்.ராம் பொதுநல மனு

அண்மையில், தி இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் மற்றும் ஏசியன் இதழியல் கல்லூரியின் முதல்வர்  சஷி குமார் ஆகியோர்  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஓய்வுபெற்ற  அல்லது தற்போது பணியில் உள்ள  உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். இந்திய அரசின் நிறுவனங்கள்  பெகசிஸ் ஸ்பைவேர் வழியாக எந்தளவிற்கு  கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது  என்பது குறித்து கண்டறிய  வேண்டும்.” என்று கோரியிருந்தனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்