Aran Sei

‘பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக்கி எதிராக வலதுசாரிகளின் இனவெறி பரப்புரை கவலையளிக்கிறது’ – பத்திரிகையாசிரியர்கள் சங்கம்

த்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கியின் மறைவுக்கு இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்ததுடன், அவரது மரணத்திற்கு வலதுசாரி அடிப்படைவாதிகளிடமிருந்து வரும் மோசமான அவதூறுகள் கண்டித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

சித்திக்கி இந்த வார தொடக்கத்தில் இருந்து, ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான காந்தஹாரை தளமாகக் கொண்ட ஆப்கானிஸ்தான் சிறப்புப் படைகளுடன் ஒரு பத்திரிகையாளராக சென்றுள்ளார்.  மேலும் ஆப்கான் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான போர் குறித்து அறிக்கை அளித்து வந்தார்.

காந்தஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டக்கின் என்ற முக்கிய சந்தை பகுதியை கைப்பற்ற நடந்த சண்டையில் டானிஷ் சித்திக்கி மற்றும் மூத்த ஆப்கானிய அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேனிஷ் சித்திக்கி: உண்மைக்கு ஒளியூட்டிய மக்கள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்

இதுகுறித்து, இந்திய பத்திரிக்கையாசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரும் அபாயங்களில் துணிந்து களமிறங்கி, முன்களத்தில் இருந்து பணி செய்யும் பத்திரிக்கையாளர்களை, சித்திக்கியின் மரணம் நினைவூட்டுகிறது. சமூக வலைதளங்களின் சில பிரிவினர் அவருக்கு எதிராக செய்யும் கொடூரமான மற்றும் மிகவும் வருந்தத்தக்க இனவெறி பிரச்சாரத்தால் நாங்கள் கவலைக்கொள்கிறோம். அவரது மரணம் அவரையும் அவரை போன்று உயிரிழந்த பத்திரிகையாளர்களையும் நினைவில் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்.” என்று தெரிவித்துள்ளது.

‘பத்திரிகையாளர் சித்திக்கி மரணத்திற்கு நாங்கள் காரணமில்லை – தாலிபன் அறிவிப்பு

“ஆசியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் ரோஹிங்கியா அகதிகளின் துயரம், நேபாள நிலநடுக்கம், ஈராக் போர், இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பு, ஹாங்காங் போராட்டங்கள், 2020-ல் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம், கொரோனா பெருந்தொற்று போன்ற பேரழிவு தரும் மனித துயரங்களை ஆவணப்படுத்தியுள்ளார். ரோஹிங்கிய அகதிகளின் துயரத்தை ஆவணப்படுத்தியதற்காக 2018 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசை வென்று, ராய்ட்டர்ஸ் அணியின் ஒரு பகுதியாக அவர் இருந்தார்.”  என்று டேனிஷ் சித்திக்கின் பணிகளை அச்சங்கம் பட்டியலிட்டுள்ளது.

மேலும், சித்திக்கியின் இறப்பு பத்திரிகை துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் இவரது புகைப்படங்கள் பத்திரிக்கைத்துறையின் கோட்பாட்டிற்கு ஒரு உயிருள்ள சான்றாகும் என்றும் இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்