பத்திரிகையாளர் சித்திக் கப்பான் மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அதன் மாணவர் அமைப்பான, கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் உட்பட, ஐந்து பேர் மீது அமலாக்கத்துறை அந்நிய செலாவணி மோசடி வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் அதிக்குர் ரஹ்மான், டெல்லி பொதுச் செயலாளர் மசூத் அஹமத், கேம்பஸ் ஃபிரண்ட் மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்புடைய முஹம்மது ஆலம் மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்புடைய சித்திக் கப்பான் ஆகியோர், மத மோதலை உருவாக்கவும், கலவரத்தை தூண்டவும், தீவிரவாதத்தை பரப்பவும், ஹத்ராசுக்கு சென்று கொண்டிருந்தபோது, உத்தர பிரதேச காவல்துறையினரால் மதுராவில் கைது செய்யப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து கூறுகிறது.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்டவர்கள் மீது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் கே.ஏ.ரவூஃப் ஷரீப் உத்தரவின் பேரில், கைது செய்யப்பட்டவர்கள் ஹத்ராஸ் சென்றதாகவும், அதற்காக அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
இதற்காக , வளைகுடா நாடுகளிலிருந்து, ஷரீப் மற்றும் அவருடைய சகாக்களுக்கு, வியாபாரத்தின் மூலம் பணம் வரும் போர்வையில்,1.36 கோடி ரூபாய் பணம் சட்ட விரோதமாக வந்துள்ளது விசாரணையில் தெரிவந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது என, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி இந்து செய்தியின் படி, இவ்வாறு சட்டவிரோதமாக பல காலமாக பணம் வந்திருப்பதாகவும், இந்தப் பணம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நிதி உதவி அளிக்கவும், கலவரத்தை தூண்டவும் பயன்பட்டதாகவும், அதுவே 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் கலவரம் நடக்க காரணம் என்றும், அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “தொடர்ந்து பல ஆண்டுகளில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கி கணக்கில், 100 கோடி ரூபாய் வரை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் பெரும் தொகை ரொக்கமாப வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது, யாருக்கெல்லாம் வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து கூறுகிறது.
“வெளிநாட்டு நிதி ஒங்குமுறைச் சட்டத்தில், பதிவு செய்யப்படாததால், வெளிநாடுகளிலிருந்து பணம் பெறும்போது மேற்கொள்ள வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் கடைபிடிக்கவில்லை” என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராசில், 19 வயது தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாலும், கடுமையாக தாக்கப்பட்டதாலும் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்தியாவையே உளுக்கிய இந்த நிகழ்வு குறித்து, செய்தி சேகரிக்கச் சென்ற, கேரள ஊடகத்திற்காக டெல்லியில் பணியாற்றும் பத்திரிகையாளர் சித்திக் கப்பான் உட்பட 4 பேரை, உத்தர பிரதேச காவல்துறையினர் கைது செய்தனர்.
சித்திக் கப்பானின் தாய், உடல் நலம் குன்றியுள்ள நிலையில், அவரை பார்ப்பதற்கு சித்திக் கப்பானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி, கேரள உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.