Aran Sei

`ஜாக்கி’ உள்ளாடை நிறுவனத்தில் உரிமை மீறல் – அமெரிக்கா விசாரணை

credit: thewire.in

பிரபல ஆடை விற்பனை நிறுவனமான ஜாக்கி இன்டர்நேஷனலின் இந்தியக் கூட்டாளரான `பேஜ்’ நிறுவனத்தின் மீது, அமெரிக்காவின் உயர்நிலை ஆயத்த ஆடை கண்காணிப்பு அமைப்பு ஒன்று விசாரணை தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெங்களூரில் உள்ள பேஜ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் யூனிட்-3 ல் நடந்த மனித உரிமை மீறல் காரணமாக நார்வேயைச் சேர்ந்த $1 லட்சம் கோடி (சுமார் ரூபாய் 75 லட்சம் கோடி) மதிப்புடைய முதலீட்டு நிதியம் தன்னுடைய முதலீட்டுப் பட்டியலில் இருந்து பேஜ் நிறுவனத்தை நீக்கியது. அதைத் தொடர்ந்து “உலகளாவிய பொறுப்பான இணைந்த உற்பத்தி (WRAP – ரேப்)” என்ற அமெர்க்கக் கண்காணிப்பு நிறுவனம் இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பேஜ் நிறுவனம், தான் `தொழிலாளர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகச் சொல்லப்படுவது அபாண்டமானது’ என்று இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

இந்த மாதிரியான வன்முறைகள் நிறுவனத்தின் தரச்சான்றிழ் நீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று ராய்ட்டர்ஸ்க்கு அனுப்பிய மின்னஞ்சலில் ரேப் செய்தித் தொடர்பாளர் சேத் லென்னன் தெரிவித்துள்ளார்.

“பேஜ் நிறுவனம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணவில்லை எனில் ரேப் தரச்சான்றிழைத் திரும்பப் பெறும். தீர்வு காண வழியில்லாத சூழல் உருவானால் அந்த நிறுவனத்தின் தரச்சான்றிழை நீக்கவும் ரேப்க்கு அதிகாரம் உள்ளது” என்று லென்னன் தெரிவித்துள்ளார்.

“தரச்சான்றிதழ் கொடுத்ததற்கான அடிப்படைகள் அனைத்தும் நம்பகத்தன்மையை இழக்கும் போது விசாரணைக்குட்படுத்தப்படும்” என்று ரேப் தெரிவித்துள்ளது.

விசாரணையில் இருக்கும் பேஜ் நிறுவனத்தின் சான்றிதழ் உரிமம் நவம்பர் 15 அன்று முடிகிறது. ரேப், பேஜ் நிறுவனத்தின் மற்ற தொழிற்சாலைகளிலும் விசாரணை நடத்துமா என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை.

ரேப் தரச்சான்றிழ், ஆடை உற்பத்தியில் பாதுகாப்பையும் நெறிமுறைகளையும் உற்பத்தி நிறுவனம் பின்பற்றுகிறது என்பதை மேற்கத்திய நிறுவனங்கள் உறுதி செய்துகொள்ள உதவுகிறது. எனவே, இந்தியா, சீனா, வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்கள் கடும் முயற்சி எடுத்து அந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்கின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜாக்கி நிறுவனம் ரேப் அமைப்பை உருவாக்கிய நிறுவனங்களில் ஒன்று. தனது அனைத்த உற்பத்தியாளர்களும் இந்தத் தரச்சான்றிழைப் பராமரிக்கும்படி கோருவதாகவும், பேஜ் நிறுவனத்தின் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுத் தொடர்பாக நடக்கும் விசாரணையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் ஜாக்கி நிறுவனம் ராய்ட்டர்ஸ்க்குத் தெரிவித்துள்ளது.

பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்ட பேஜ் நிறுவனம் இந்தியா உட்பட ஏழு நாடுகளுக்கான ஜாக்கி ஆடை உற்பத்திக்கான தரச்சான்றிழை வைத்துள்ளது. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஸ்பீடோ நிறுவனத்தின் நீச்சலாடைத் தயாரிப்பிலும் பேஜ் நிறுவனம் ஈடுபடுகிறது.

“நார்வே அரசு முதலீட்டு நிதியத்தின் குற்றச்சாட்டும் அதனடிப்படையில் பேஜ் நிறுவனம் விசாரிக்கப்படுவதும் முக்கியமான விஷயம் என்று ஸ்பீடோ நிறுவனம் சென்ற மாதம் கருத்து கூறியிருந்தது.

ரேப் எப்போது விசாரணையைத் தொடங்கும் என்று குறிப்பிடவில்லை என்றாலும் இது தொடர்பான விஷயம் அறிந்த ஒருவர் செப்டம்பர் இறுதியில் விசாரணை தொடங்கி விட்டதாகத் தெரிவித்துள்ளார் என்று தி வயர் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.

பெங்களூரில் இயங்கி வரும் பேஜ் நிறுவனத்தின் யூனிட்-3 ல் 1000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். கடந்த மார்ச் மாதம் முடிந்த நிதியாண்டில் பேஜ் நிறுவனம் $40 கோடி (சுமார் ரூ.3000 கோடி) வருவாய் ஈட்டியிருப்பதாக பேஜ் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன் வருவாயில் யூனிட்-3-ன் பங்கு என்ன என்ற விவரத்தை பேஜ் வெளியிடவில்லை.

இது தொடர்பாக நார்வே அரசு நிதியத்தின் அறநெறிக்கான கவுன்சிலுடன் பேசி வருவதாக பேஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகளும் தொழிலாளர் உரிமைகளும் மீறப்பட்டிருப்பது தொடர்பான விசாரணைக்குப் பிறகு நார்வே செல்வ நிதி பேஜ் நிறுவனத்தை முதலீட்டுப் பட்டியலில் இருந்து நீக்கும்படி அந்த கவுன்சில் பரிந்துரைத்திருந்தது.

சந்திப்பதற்கான பேஜ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுள்ளதாகவும் பேஜ் மீதான பரிந்துரையை மாற்ற வேண்டுமா என்பதற்கு இன்னொரு விசாரணையை நடத்த வேண்டியிருக்கும் என்று அறநெறி கவுன்சில் ராய்ட்டர்ஸ்க்குத் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்