Aran Sei

கொரோனா நெருக்கடிக்கு பின் விலைவாசி ஏற்றம்!

credit: smestreet.in

த்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறைக்கான பொருளாதார ஆலோசகர் அலுவலகம் ஆகஸ்ட் 2020-ம் ஆண்டுக்கான இடைக்கால மொத்த விலைக் குறியீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மொத்த விலைக் குறியீட்டு எண் ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதி வெளியிடப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் மாத மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 0.16 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் ஆகஸ்ட் 2019-ம் ஆண்டில் மொத்த விலைக் குறியீட்டு எண் அதிகரிப்பு 1.17 விழுக்காடாக இருந்தது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

 

மொத்த விலை அடிப்படையில் பணவீக்கத்தை கணக்கிடுவதற்கு அடிப்படையான உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சக்தி மற்றும் உற்பத்திப் பொருட்கள் ஆகிய மூன்று வகைப்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

அடிப்படையான உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களை பொறுத்த வரையில், விலைகள் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 0.93 விழுக்காடு அதிகரித்துள்ளன என்றும் உணவு அல்லாத பொருட்களின் விலைகள் 3.06 விழுக்காடு அளவுக்கு உயர்ந்திருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

எரிபொருள் மற்றும் மின்சக்தியை பொறுத்தவரையில் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது விலை 0.77 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்றும் கனிம பொருட்களின் விலைகள் 10.21 விழுக்காடு அளவுக்கு அதிகரித்திருக்கின்றன என்றும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை 4.72 விழுக்காடு அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது நிலக்கரி மற்றும் மின்சாரத்தின் விலையில் மாற்றம் ஏதுமில்லை.

உற்பத்திப் பொருட்களை பொறுத்தவரையில் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது விலைகள் 0.59 விழுக்காடு அதிகரித்துள்ளன என்றும் மொத்தம் உள்ள 22 உற்பத்தி பொருள்களுக்கான என்.ஐ.சி இரு இலக்க தொகுதிகளில் 11 தொகுதிகள் விலை ஏற்றத்தை கண்டுள்ளன. அவற்றில்  உணவுப் பொருட்கள், குளிர் பானங்கள், தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்கள், மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்கள், மருந்து தயாரிப்பு செலவுகள், மருத்துவ இரசாயனங்கள், இயந்திரங்கள், மின்னணு கருவிகள் ஆகியவை அடங்கும்.

மாறாக, புகையிலைப் பொருட்கள், துணிமணிகள், காகிதம் மற்றும் காகிதம் சார்ந்த பொருட்கள், இரசாயனம் மற்றும் இரசாயனம் சார்ந்த பொருட்கள், ரப்பர் மற்றும் நெகிழி பொருட்கள் போன்றவற்றின் விலை ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது குறைந்திருக்கிறது என்றும் ஆகஸ்ட் மாதத்தில் மோட்டார் வாகனங்களுக்கான உற்பத்தி செல்வுகளில் மாற்றம் இல்லை என்றும் இந்த மொத்த விலை குறியீட்டு அறிக்கை குறிப்பிடுகிறது.

ஐ.சி.ஆர்.ஏ-வின் முதன்மை பொருளியலாளர் (credit: business-standard.com)
ஐ.சி.ஆர்.ஏ-வின் முதன்மை பொருளியலாளர் அதிதி நாயர் (photo credit: business-standard.com)

“அடுத்த சில மாதங்களில் மொத்த விலைக் குறியீட்டு எண் பணசுருக்கத்துக்கும் பணவீக்கத்துக்கும் மாறி மாறி செல்லும் என்றும் அது பகுதியளவு முந்தைய காலத்தின் அடிப்படையாலும், பகுதியளவு சரக்குகள் மற்றும் உணவுப் பொருட்கள் விலைகளில் ஏற்ற இறக்கங்களாலும் நாடக்கும் என்று ஐ.சி.ஆர்.ஏ-வின் முதன்மை பொருளியலாளர் அதிதி நாயர் கூறியுள்ளார். நிதியாண்டு 2020-21ல் மொத்த விலைக் குறியீட்டு எண் சராசரியாக 0.5% பணச் சுருக்கத்தை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்
பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்

மொத்த விலை குறியீட்டு எண் அதிகரித்திருப்பதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற கேள்வியுடன் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனிடம் பேசிய போது, ”ஏற்கெனவே, வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் இழந்துள்ள நிலையில் விலைவாசி ஏற்றம் மக்களுக்கு மேலும் துன்பத்தை விளைவிக்கும்” என்று கூறினார்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்