கொரோனா நோய்த்தொற்று காரணமாக 1930 – ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மிக மோசமான பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது என உலக வங்கித் தலைவர் கூறியுள்ளார்.
பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கி ஆண்டுக்கூட்டத்தின் தொடக்க நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய உலகவங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ், ”இந்தப் பொருளாதாரச் சரிவு மிகவும் ஆழமானது. 1930-ம் ஆண்டுக் காலகட்டத்தில் உலகம் கண்ட பொருளாதாரச் சீரழிவுக்கு அடுத்தபடியான பெரும் சீரழிவை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.” எனக் கூறியுள்ளார்.
”இந்த நிலை பல வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு ஒரு பேரழிவுச் சூழல். தீவிர வறுமையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போதுள்ள பொருளாதாரச் சுருக்கத்தைக்கொண்டு பார்க்கையில், உலக நாடுகள் கடன் நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.” என்று எச்சரித்துள்ளார்.
இந்த நிதியாண்டுக்கு உலக நாடுளுக்கான வளர்ச்சித் திட்டத்தை உலக வங்கி உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடிமக்களுக்குக் கொரோனா தடுப்புமருந்து, சோதனைக் கருவிகள் மற்றும் சிகிச்சை மேற்கொள்வதற்காக வளரும் நாடுகளுக்கு 1200 கோடி டாலர்கள் வழங்குவதாக உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு செவ்வாய் அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
Today our Board approved up to $12b in financing to support developing countries with the purchase and distribution of #COVID19 #vaccines, tests, and treatments. This builds on our emergency response programs already reaching 111 countries https://t.co/coPQFGmLU0
— World Bank (@WorldBank) October 13, 2020
டேவிட் மல்பாஸ் உலகப் பொருளாதாரம் ‘K’ வடிவ மீட்டெடுப்பில் உள்ளதாகக் கூறியுள்ளார். ”வளர்ந்த நாடுகளில் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதை ஊக்குவிப்பது வழியாகச் சந்தைகளைக் கவனித்துக்கொள்ள முடிகிறது. அமைப்புசாரா தொழிலில் வேலையிழந்தவர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நம்பியிருக்கின்றனர்.”
”ஏழை நாடுகளில், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகளில் வருவாய் இல்லை, வேலைகள் இல்லை. வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்த நாடுகளின் தொழிலாளர்களிடமிருந்து வரும் வருவாயும் இல்லை.”
”இந்தப் பிரச்சனை குறித்த கவன ஈர்ப்பை மேற்கொண்டு ஏழை நாட்டு மக்களின் சமூகப் பாதுகாப்புக்காகவும், அங்குள்ள வேளாண் சவால்களை எதிர்கொள்ளவும் உலக வங்கி கூடுதல் உதவி வழங்க விரும்புகிறது.” என்று டேவிட் தெரிவித்துள்ளார்.
”சில நாடுகள் ஏற்றுமதி சந்தைகளைத் திறந்து வைத்திருப்பதும் மக்களுக்குத் தட்டுப்பாடின்றி உணவு கிடைப்பதற்காக மானிய திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்துவதும் வரவேற்புக்குரியன.”
மக்களின் உயிர்களைக் காப்பது, உடல்நலம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மட்டுமே இப்போது முன்னுரிமை என்றும் அதற்காக மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதாரத்தில் நெகிழ்வுத்தன்மையோடு இருந்து, புது வேலை வாய்ப்புகள் மற்றும் பதவிகள் உருவாக்குவதன் மூலம், நாடுகள் கொரோனாவுக்குப் பிறகான உலகப் பொருளாதாரச் சூழலுக்குத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதாரத் திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள் மற்றும் கல்விக்காகச் செலவிட உலக வங்கி நாடுகளை ஊக்குவிக்கிறது என்று குறிப்பிட்டு, பள்ளிகள் திறப்புக்கு இது மிக அவசியமான முன்னெடுப்பு என்று கூறியுள்ளார்.
வளரும் நாடுகளில் கோடிக்கணக்கான மாணவர்கள் இன்னும் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருப்பதாகவும் கல்வி பின்னோக்கிச் சென்றால் அந்த நாடுகளுக்குப் பெரும் சீரழிவை ஏற்படுத்தக் கூடும் என்றும் உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ் எச்சரித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.