Aran Sei

பாஜக ஆட்சிக்காலத்தில் பசித்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு – உலக வறுமைக் குறியீடு தகவல்

2015 மற்றும் 2019 -ம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக உலக வறுமைக் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

2010 மற்றும் 2014 -ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை 15.1 சதவீதமாக இருந்தது. அதற்குப் பிந்தைய ஐந்து ஆண்டுகளில் 17.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

107 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 94வது இடத்தைப் பிடித்துள்ளது. அண்டை நாடுகளான பங்களாதேஷ் இந்தப் பட்டியலில் 75வது இடத்திலும், பாகிஸ்தான் 88வது இடத்திலும் உள்ள நிலையில் அவற்றிற்கும் கீழ் நிலையில் இந்தியா உள்ளது.

குழந்தைகளின் உயரத்திற்குத் தகுந்த எடை இல்லாமல் இருப்பது, வயதுக்கு ஏற்ப வளர்ச்சி இல்லாமல் இருப்பது ஆகிய இரண்டும் வறுமைக் குறியீட்டைக் கணக்கிடுவதில் மூன்றில் இரண்டு பங்கு மதிப்பைப் பெறுகின்றன.

வயதுக்கு ஏற்ப வளர்ச்சி இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 2000 ஆண்டில் 54 சதவீதமாக இருந்தது. அது தற்போது 34 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேவேளையில், உயரத்திற்குத் தகுந்த எடை இல்லாமல் இருக்கும் குழந்தைகளின் சதவீதம் கடந்த 20 ஆண்டுகளில் குறையாமல் உள்ளது.

வறுமைக் குறியீட்டு அறிக்கையின்படி, இந்தியாவில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 3.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், மொத்த மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

தெற்கு, கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியப் பிராந்தியங்களில் இந்தியாவை விட மோசமான நாடுகளாக திமோர் லெஸ்தே, ஆப்கானிஸ்தான் மற்றும் வட கொரியா நாடுகள் உள்ளன.

உலகம் முழுவதும் 6.9 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பதாக உலக வறுமைக் குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

“2030 -ம் ஆண்டுக்குள் பசியற்ற உலகைப் படைக்க வேண்டும் என்ற லட்சியத்தை அடைவது கடினம். இதே வேகத்தில் சென்றால், 37 நாடுகள் குறைந்தபட்ச இலக்கைக் கூட அடைய முடியாது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தக் கணக்கெடுப்பில் கொரோனா காலம் சேர்க்கப்படவில்லை என்றும், கொரோனாவின் தாக்கம் பசியையும் ஊட்டச்சத்து குறைபாட்டையும் மேலும் மோசமடையச் செய்யும்” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்